Thursday, June 13, 2013
மெல்போர்ன்::குடிபோதையில் இங்கிலாந்து வீரரை தாக்கிய டேவிட் வார்னர், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
பர்மிங்காமில் கடந்த ஜூன் 8ம் தேதி நடந்த சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இப்போட்டி முடிந்த பின், பர்மிங்காமில் உள்ள "பார்' ஒன்றில் மது அருந்திய டேவிட் வார்னர், போதையில் தகராறு செய்துள்ளார். அப்போது இங்கிலாந்து வீரர் ஒருவருடன் கைகலப்பில் ஈடுபட்டு, அவரை தாக்கியுள்ளார். அந்த வீரர் ஜோ ரூட்டாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) வெளியிட்ட அறிக்கை: எதிரணி வீரர்களுடன் உடல் ரீதியான மோதலில் ஈடுபடுவது கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) விதிமுறைப்படி குற்றம். எனவே, டேவிட் வார்னரை, நியூசிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இருந்து நீக்குகிறோம். இச்சம்பவம் குறித்து வார்னரிடம் விசாரணை நடத்தப்படும். குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் கடுமையான தண்டனை வழங்கப்படும். விசாரணை முடியும் வரை இச்சம்பவம் குறித்து வேறு எந்த கருத்தையும் சி.ஏ., வெளியிடாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இங்கிலாந்து உறுதி:
இச்சம்பவம் நடந்ததை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு உறுதி செய்தது. ஆனால் இங்கிலாந்து வீரர் யார் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டது. இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு வெளியிட்ட அறிக்கையில், ""கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்ட அறிக்கையின் படி, பர்மிங்காமில் உள்ள "பார்' ஒன்றில், ஆஸ்திரேலியாவின் வார்னர், போதையில் இங்கிலாந்து வீரருடன் மோதலில் ஈடுபட்டது உண்மை. முறைகேடாக நடந்து கொண்டதற்காக வார்னர், இங்கிலாந்து வீரரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். சம்மந்தப்பட்ட இங்கிலாந்து வீரரும், அவரது மன்னிப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். இதுகுறித்து முழுமையாக விசாரித்ததில், இச்சம்பவத்தில் இங்கிலாந்து வீரருக்கு எவ்வித பொறுப்பும் இல்லை. இது, கிரிக்கெட் ஆஸ்திரேலியா தொடர்பான விஷயம். இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை,'' என தெரிவிக்கப்பட்டது.
தொடரும் சர்ச்சை
சமீபகாலமாக டேவிட் வார்னர் சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் இந்தியாவில் நடந்த 6வது பிரிமியர் கிரிக்கெட் தொடரின் போது டில்லி அணிக்காக விளையாடிய இவர், "டுவிட்டர்' இணையதளத்தில் இரண்டு ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்களை தாக்கி கருத்து வெளியிட்டார். இதற்காக, கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) இவருக்கு ரூ. 3 லட்சம் அபராதம் விதித்தது. தற்போது எதிரணி வீரரிடம் மோதல் போக்கை கடைபிடித்துள்ள இவருக்கு, ஆஷஸ் தொடரில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

No comments:
Post a Comment