Thursday, June 6, 2013

தமிழக மீனவர்களின் நலனைக் காக்க கச்சத் தீவை மீட்பதே ஒரே வழி என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா!

Thursday, June 06, 2013
சென்னை::தமிழக மீனவர்களின் நலனைக் காக்க கச்சத் தீவை மீட்பதே ஒரே வழி என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா   தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
 
உள்நாட்டு பாதுகாப்பு குறித்த மாநில முதல்வர்களின் மாநாடு புது டில்லியில் நேற்று  நடந்தது. இந்த மாநாடு  குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், இம்மாநாட்டில் தான் பங்கேற்கவில்லை என்றும் தனது சார்பில் மூத்த அமைச்சர் கே.பி.முனுசாமி கலந்துக் கொண்டு தனது உரையை படிப்பார் என்றும் கூறிப்பிட்டிருந்தார்.
 
மேலும் சென்ற தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு முழுமையாக பேசவிடாமல் குறுக்கீடு செய்ததும், அதையொட்டி அவர் மாநாட்டிலிருந்து வெளிநடப்பு செய்ததையும் அந்த கடிதத்தில் கூறிப்பிட்டிருந்தார்.
 
அதோடு, ``உள்நாட்டு பாதுகாப்பு குறித்த மாநில முதல்வர்களின் மாநாடு மாநிலங்களின் முக்கிய செயல்பாடான சட்டம், ஒழுங்கு பராமரிப்பு தொடர்பானது என்பதால் மிக முக்கியமானதாகும். ஆனால் எனது அனுபவத்தில் மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் இந்த மாநாடு ஒரு சம்பிரதாய நடவடிக்கையாகிவிட்டது. நிகழ்ச்சி நிரல் குறித்து முதல்வர்கள் கருத்துக்களை கூறுவதற்கு மிகக் குறைந்த வாய்ப்பே அளிக்கப்படுகிறது.
 
தற்போதுள்ள நிலையில் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக கூட்டப்படும் முதல்வர்கள் மாநாடு வெறும் சம்பிரதாய நடவடிக்கையாக ஆகிவிட்டது. மாநில முதலமைச்சர்களை கலந்து ஆலோசிக்கும் நடைமுறைக்கு பதிலாக அவர்களின் பேச்சு பாதியிலேயே தடை செய்யப்படுகிறது. முதலமைச்சர்கள் மாநாட்டில் நான் கலந்து கொள்வதற்கு பதிலாக மூத்த அமைச்சரான கே.பி.முனுசாமி, உள்துறை செயலாளர் மற்றும் காவல் துறை தலைவர் ஆகியோரை கலந்து கொள்ளும்படி கூறியிருக்கிறேன்.
 
நிகழ்ச்சி நிரலில் கொடுக்கப்பட் டுள்ளவை பற்றி எனது கருத்துக்களை விரிவாக கூறியிருக்கிறேன். மாநாட்டில் எனது உரையை அமைச்சர் வாசிப்பார். அவற்றை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்'' என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார்.
 
இதையொட்டி, புது டில்லியில் நேற்று  நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில், அமைச்சர் முனுசாமி பங்கேற்று முதல்வரின் அறிக்கையை படித்தார்.
 
முதல்வரின் உரையில் கூறியிருப்பதாவது:-
 
உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான முதல்-அமைச்சர் மாநாட்டுக்காக இங்கு கூடி இருக்கிறோம். மாநிலங்களில் பொது ஒழுங்குகளை காப்பாற்றி மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க ஆலோசிக்கப்படும் இந்த கூட்டம் மிகவும் முக்கியமானதாகும்.
 
நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு நிலையை இதுபோன்ற கூட்டங்கள் மூலம் நிறைவாக செயல்படுத்த முடியும். நாட்டின் அமைதியும், பாதுகாப்பும் இல்லை என்றால் சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை காண முடியாது. இதுதான் உலக உண்மை. எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
ஆனால் இவ்வளவு முக்கியமான பிரச்சினையில் இதுபோன்ற மாநாடுகளை மத்திய அரசு வெறும் சடங்கு போல நடத்தி வருவது வருத்தத்தை அளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. ஒரே நிகழ்ச்சி நிரலில் எந்த மாற்றமும் செய்யாமல் ஆலோசிக்கப்படுகிறது. இது சரியான வழியாக அமையாது.
 
எங்கள் மாநிலத்தை பொறுத்தவரை இலங்கை பிரச்சினை பல ஆண்டுகளாக மோசமான கவலை அளிக்கும் ஒன்றாக உள்ளது.இலங்கை தமிழ் தீவிரவாத பிரச்சினையால் மாநிலத்திற்கு எந்த கவலையும்  இல்லை. 110 முகாம்களில் 67 ஆயிரம் இலங்கை தமிழ் அகதிகளும் முகாம்களுக்கு வெளியே 35 ஆயிரம் பேரும் வசித்து வருகிறார்கள்.
 
இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவது பிரச்சனைக்கு முக்கிய காரணம். இலங்கை தமிழர்கள் சொந்த நாட்டில் 2-ம் தர குடிமக்களாக நடத்தப்பட்டதால் அங்கு பிரச்சினைகள் நீடித்து வருகின்றன. இது தமிழ் நாட்டை மிகவும் பாதித்து வருகிறது. இந்த பிரச்சினையை கையாள்வதிலும் இந்திய மீனவர்களை பாதுகாப்பதிலும், மத்திய அரசு உணர்வு பூர்வமாக செயல்படவில்லை. தமிழக மீனவர்களை பாதுகாப்பதில் திறமையற்று செயல்படுகின்றனர்.
 
இதனால் இந்திய மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக் குறியாக அமைந்துள்ளது. ஒவ்வொரு தடவையும் இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்கிறது. இது ஒரு முக்கியமான பிரச்சினை. இந்திய கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி கொலைவெறி தாக்குதல் நடத்துவது கடுமையான பிரச்சனையாகும் இதுகுறித்து, நான் பலதடவை பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதததை கண்டித்து போராட்டம் நடத்தி இருக்கிறது.
 
இலங்கை ராணுவத்தின் இந்த கொலைகார கொடூர தாக்குதலை நிறுத்தும்படி சொல்லியும் எந்த பயனும் இல்லை. அப்பாவி தமிழக மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு அவர்களுடைய பாரம்பரிய வாழ்வாதாரம் நாசமாக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காததுதான் இதற்கு காரணம்.
 
1974 ஆண்டில் பாராளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி இலங்கைக்கு கொடுக்கப்பட்ட கச்சத்தீவில் நமது இறையாண்மையை நிலைநாட்டுவதுதான் பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு என்று நான் மத்திய அரசிடம் பலமுறை கூறியிருக்கிறேன்.
 
இந்திய மீனவர்களை பாதுகாப்பதில் தமிழக அரசு இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு கச்சத்தீவை மீட்பதுதான்.
 
இந்தியாவுக்கு சொந்தமான கச்சத் தீவு இந்திய இறையாண்மையை மீறி 1974-ம் ஆண்டு இலங்கையிடம் வழங்கப்பட்டது. அதை திரும்ப பெற வேண்டும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு 3 முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இந்த விஷயத்தில் கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு வற்புறுத்திகிறேன்.
 
1. இந்திய மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்கி கொலை செய்வதை தடுக்க வேண்டும்.
 
2. கச்சத் தீவையும் அதை சுற்றியுள்ள பகுதியையும் மீட்க வேண்டும்.
 
3. இலங்கை-இந்தியா இடையே கடல் எல்லையை வரையறை செய்ய வேண்டும்.
 
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி, தொடர்ந்து  தாக்கப்படுகின்றனர். தமிழக மீனவர்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படுகிறது. இந்த தாக்குதலை  தடுக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களை பாதுகாக்க கடல் எல்லை சீரமைக்க வேண்டும் என்றும், அதற்காக கச்சத் தீவை மீட்பது ஒன்றே வழி என்றும் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியிருந்தார்.

No comments:

Post a Comment