Friday, June 28, 2013
இலங்கை::அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு ஆதரவு வழங்காத கட்சியினர் ஜனநாயக விரோதிகளாகவே கருதப்படுவர் என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
பதின் மூன்றாவது திருத்தம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டின் நலனை முன்னிறுத்தி அரசாங்கம் மேற்கொள்ளும் ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளுக்கு சகல கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும். அவ்வாறு ஆதரவளிக்காதவர்கள் ஜனநாயக விரோதிகளாவர் எனவும் அமைச்சர் தெரிவித்தார். எதிர்வரும் ஜுலை 9 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்குமாறு கோரி அதனை எதிர்க்கும் கட்சிகளுடன் அரசாங்கம் இதற்கு இடைப்பட்ட காலத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்துமா அல்லது அது தொடர்பில் ஏதாயினும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என அமைச்சரிடம் வினவப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், அரசாங்கம் திறந்த அழைப்பை விடுத்துள்ளது. இந்த வெளிப்படையான அழைப்பு பேச்சு நடத்தியதற்குச் சமனானது எனவும் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் :-
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன் முதலாவது அமர்வு எதிர்வரும் ஜுலை 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அரசாங்கம் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. ஜனநாயக ரீதியாக இதற்கான சகல நடவடிக்கை களையும் அரசாங்கம் உச்ச அளவில் எடுத்துள்ளது.
பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு ஐ. தே. க., ஜே. வி. பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் சமுகமளிப்பதில்லை என தெரிவித்துள்ள துடன் அதற்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றன. இந்நிலையில் அக்கட்சிகள் பங்கேற்காமல் தெரிவுக் குழுவின் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட இடமுள்ளதா என அமைச்சரிடம் கேட்டபோது :-
வெற்றி தோல்வி என்பது வேறு, ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து அவர்கள் தெரிவுக் குழுவில் பங்கேற்பது முக்கியம் எனவும் தெரிவித்தார்.
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான சர்ச்சைகளுக்கு ஜனநாயக முறையில் தீர்வு காண்பதற்கே அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவு குழுவை நியமித்துள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும். அவர்கள் இத் தெரிவுக் குழுவுக்கு சமுகமளிப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆளும் கட்சிப் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. ஆளுங் கட்சிக்குள் சில முரண்பட்ட கருத்துக்கள் நிலவியதையடுத்து அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவது என அங்கு இணக்கம் காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் மாகாண சபை முறைமையினை ஒழிப்பதற்கான அமைப்பு முரண்பாடான கருத்துக்களை முன்வைத்து வருகிறது. நேற்று முன்தினம் அந்த அமைப்பு கொழும்பில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தி 13வது திருத்தத்தை வைத்துக்கொண்டு வட மாகாண சபை தேர்தலை நடத்தினால் பெரும் பாதிப்பினை எதிர்நோக்க நேரிடும் என பகிரங்கமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இத்தகைய சர்ச்சைகளுக்கு பாராளுமன்றத் தெரிவுக் குழு மூலமே முடிவுகாண முடியும் என்ற காத்திரமான நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது. இந்த நிலைப்பாட்டை வலுப்படுத்து வதற்கான சகல முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment