Friday, June 7, 2013

சீமான், பிரபாகரன் பற்றி நாராயணசாமி கருத்து: மத்திய அமைச்சருக்கு எதிரான வழக்கு ஐகோர்ட் தள்ளுபடி!


Friday, June 07, 2013
மதுரை:சீமான், பிரபாகரன் பற்றி சர்ச்சைக்குரிய வகையில், மத்திய அமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளதாகவும், அவர் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும் தாக்கலான மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை, தள்ளுபடி செய்தது.

வழக்கறிஞர், ரமேஷ் தாக்கல் செய்த மனு: பிரதமர் அலுவலக இணை அமைச்சர், நாராயணசாமி, மே 20ல், அறிக்கை வெளியிட்டார். அதில், தீவிரவாதத்தை மறைமுகமாக ஆதரிக்கும் ஒரு கூட்டம், தமிழகம், புதுச்சேரியில் செயல்படுகிறது. தடை செய்யப்பட்ட புலிகள் இயக்க தலைவரின் போட்டோவை பிரசுரித்து, கடலூரில் கூட்டம் நடத்த, சினிமா இயக்குனர் சீமான் அனுமதி கோரினார்; தமிழக அரசு, அனுமதி மறுத்தது.

சீமான் கூட்டத்தில், காஷ்மீர் பயங்கரவாதி யாசின் மாலிக்கை பேசச் செய்துள்ளனர். தீவிரவாதம், பிரிவினை வாதத்தை தூண்டுபவர்கள் தேசத்துரோகிகள். எங்களைப் பொறுத்தவரை, சீமான் போன்றவர்கள் சுண்டைக் காய்கள். இந்தியாவிற்கு எதிராக செயல்படுபவர்களை தூக்கி எறிய வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

இது, மக்களிடையே பகை உணர்வை ஏற்படுத்தும் செயல். அமைச்சராக உள்ள ஒருவர், இப்படி கருத்து தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல. நாராயணசாமி மீது, வழக்குப் பதிவு செய்யக் கோரி, டி.ஜி.பி.,யிடம், மே 21ல் புகார் செய்தேன். மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளார்."அமைச்சர், மதுராந்தகத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அது, இக்கோர்ட்டின் அதிகார வரம்பிற்குள் வராது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என, நீதிபதிகள், என்.பால்வசந்தகுமார், பி.தேவதாஸ்
அடங்கிய, "பெஞ்ச்' உத்தரவிட்டது.

No comments:

Post a Comment