Monday, June 10, 2013
இலங்கை::இந்தியாவின் தற்போதைய நிலைப்பாட்டுக்கு ஏற்புடையதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக் குழுக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வது அவசியம் என்ற கருத்தை இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய ராஜ்ய சபையின் பிரதி எதிர்க்கட்சி தலைவர் ரவி சங்கர் பிரசாத் தலைமை யிலான தூதுக் குழுவினர் வலியுறுத்தியுள்ளார்கள். இவர் பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதித் தலைவராவார். இந்தத் தூதுக் குழுவில் சிவசேனா அமைப்பின் தலைவர் சுரேஷ் ரகு, இந்திய சிரேஷ்ட ஊடகவியலாளர் சுவப்பன் தஸ்குப்தா, ஓய்வு பெற்ற ஐ. எப். எஸ். அதிகாரி விவேக் கட்ஜீ, ஆர். எஸ். எஸ். பிரதிநிதி ராம் மாதவ், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் மொனிகா அரோரா ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த இந்தியக் குழுவினர் நீர் விநியோக வடிகாலமைப்பு துறை அமைச்சரும், அரசாங்கத்தின் பிரதம கொரடாவுமான தினேஷ் குணவர்தனவை சந்தித்து உரையாடினர். இதன்போது தமிழர்கள் இலங்கை அரசியல் செயற்பாடுகளில் கலந்து கொள்வதன் மூலமும் உள்ளூரில் அரசியல் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடுவதன் மூலமும் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்துவதற்கு ஆர்வம் காட்ட வேண்டுமேயொழிய எதற்கெடுத்தாலும் இந்தியாவையோ வேறொரு நாட்டையோ நம்பியிருக்கக் கூடாதென்றும் இந்தியத் தூதுக் குழுவினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் மூலம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்த முயற்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிடிவாதப் போக்கு காரணமாக சுமார் 18 மாதங்கள் காலதாமதமாகி இருக்கிறதென்றும் எனவே இனிமேலாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் கலந்து கொண்டு தங்கள் பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்த முயற்சியெடுக்க வேண்டுமென்றும் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வெளிநாடுகளுக்குச் சென்று முறைப்பாடு செய்வதில் எவ்வித பயனுமில்லை என்றும் இது பிரச்சினையை நீடிப்பதற்கு இடமளிக்குமென்றும் இந்தியத் தூதுக்குழுவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு வருகை தந்தால், தாங்கள் மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்று நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணக் கூடிய வகையில் அவர்களுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்துவோம் என்று அரசாங்கத் தலைவர்கள் இந்தியத் தூதுக்குழுவினருக்கு உறுதிமொழி அளித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment