Tuesday, June 18, 2013

நாங்க பூமியில இருக்கோம்.. வேறு யாராச்சும் இருக்கீங்களா?’ வேற்றுக்கிரக வாசிகளுக்கு மெசேஜ்: விஞ்ஞானிகள் பிஸி சக்தி வாய்ந்த ஆன்டெனா ரெடி

Tuesday, June 18, 2013
இலங்கை::வாஷிங்டன்:வேற்றுக்கிரக வாசிகள் பறக்கும் தட்டில் வந்தார்கள், போனார்கள் என்று எத்தனை காலம்தான் வெட்டிக் கதை பேசுவது. வாருங்கள்.. எல்லாருமாக சேர்ந்து ‘நாங்க பூமியில இருக்கோம்’ என்று தொடர்ந்து மெசேஜ் அனுப்புவோம் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள்.

பறக்கும் தட்டுகள் பறப்பதாகவும் வேற்றுக்கிரகவாசிகள் எட்டிப் பார்த்ததாகவும் உலகம் முழுவதும் அவ்வப்போது கதைகள் உலா வருகின்றன. மேலே இருந்து விழுந்து எரிந்த பறக்கும் தட்டில் இருந்து விழுந்து எரிந்து கருகிப்போன வேற்றுக்கிரக வாசியின் அழுகிய உடலை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் என்று தகவல் கசியவிட்ட சீன ஆசாமி சமீபத்தில் கைது செய்யப்பட்டது தனிக்கதை.
இந்நிலையில், அமெரிக்காவில் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், தொழில் முனைவோர் உள்பட பல தரப்பினர் சேர்ந்து ‘தி லோன் சிக்னல்’ என்ற புராஜக்ட் ஆரம்பித்திருக்கிறார்கள்.பூமியில் இருந்து சுமார் 17.6 ஒளி ஆண்டுகள் தொலைவில்

(166 லட்சம் கோடி கி.மீ.) உள்ள நட்சத்திர குடும்பம் ‘கிளயீஸ் 526’. இதன் கோள்களில் நம்மைப் போல உயிரினங்கள் வசிப்பதற்கான சாத்தியக்கூறு அதிகம் இருப்பதாக தெரியவருவதால் அந்த ஏரியாவை குறிவைத்து சக்திவாய்ந்த சிக்னல்களை அனுப்ப இந்த குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள்.
இதுபற்றி டீமின் தலைமை அதிகாரி ஜேக்கப் ஹக் மிஸ்ரா கூறியதாவது:

வேற்றுக்கிரக வாசிகளுக்கு மெசேஜ் அனுப்புவது என்பது ஆரம்பத்தில் காமெடி போல தெரியும். ஆனால், இப்போது இல்லாவிட்டாலும் எப்போதாவது, வேற்றுக்கிரக வாசிகளை தொடர்பு கொண்டுவிட வேண்டும் என்பது நம் இலக்கு. கலிபோர்னியாவில் 1968ம் ஆண்டு நிறுவப்பட்ட ஜேம்ஸ்பர்க் எர்த் ஸ்டேஷன் மூலம் இந்த சிக்னல்கள் அனுப்பப்படும். அதிக திறன் வாய்ந்த ஆன்டெனாவை 30 ஆண்டு குத்தகைக்கு எடுத்து இந்த புராஜக்டில் ஈடுபட உள்ளோம். டிவி சிக்னல், ரேடியோ சிக்னல், மின்காந்த கதிர்கள் ஏராளமாக பூமியை சுற்றி வலம் வருகின்றன. ஆனால், அவை வீக்கானவை. அவற்றைவிட சக்திவாய்ந்த, தொலைதூரம் பயணம் செய்தாலும் வலுவாக இருக்கக்கூடிய சிக்னல்கள் இங்கிருந்து அனுப்பப்படும். ‘நாங்கள் பூமியில் இருக்கிறோம். நீங்கள் யாராவது அங்கு இருக்கிறீர்களா’ என்ற தகவல் இதன்மூலம் பரப்பப்படும். பூமியின் இருப்பிடத்தை காட்டக்கூடிய சிக்னலும் அனுப்பப்படும்.

இதேபோன்ற ஆன்டெனாக்கள், வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்தால் நம் இருப்பிடத்தை கட்டாயம் தெரிந்துகொள்வார்கள். வேற்றுக்கிரக வாசிகளுக்கு நீங்கள் எதுவும் சொல்ல வேண்டியிருக்கிறதா? எல்லோரும் ஒன்றுசேர்ந்து மெசேஜ் அனுப்புவோம்.

No comments:

Post a Comment