Monday, June 17, 2013

திமுக நிர்வாகக்குழு கூடியது : சேது சமுத்திர திட்டம் பற்றி ஆலோசனை!:வெற்றியை எதிர்பார்த்துதான் தேர்தலில் திமுக நிற்கிறது கருணாநிதி பேட்டி!

Monday, June 17, 2013
சென்னை::மாநிலங்களவை தேர்தலில் வெற்றியை எதிர்பார்த்துதான் திமுக நிற்கிறது என்று கருணாநிதி கூறினார். திமுக நிர்வாகக் குழு கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடந்தது. திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். பொருளாளர் மு.க. ஸ்டாலின், முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, சற்குண பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மற்றும் திருச்சி சிவா, கனிமொழி, டிகேஎஸ் இளங்கோவன், மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி. சேகர், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பிறகு நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:

நிர்வாக குழு கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது?

சேது சமுத்திர திட்டத்தை வலியுறுத்தும் அறப்போரின் தொடக்கமாக வரும் 8-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின், ராமநாதபுரத்தில் துரைமுருகன், கன்னியாகுமரியில் டி.ஆர்.பாலு, திருநெல்வேலியில் சற்குண பாண்டியன், சிவகங்கையில் வி.பி.துரைசாமி, கடலூரில் கனிமொழி, புதுச்சேரியில் டி.கே.எஸ்.இளங்கோவன், காரைக்காலில் திருச்சி சிவா, புதுக்கோட்டையில் ஆ.ராசா பங்கேற்கின்றனர். அந்தந்த மாவட்ட செயலாளர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகிப்பர்.

மாநிலங்களவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது. அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ஒரு வேட்பாளர் வாபஸ் பெறப்பட்டுள்ளார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

அது அவர்கள் மேற்கொண்ட நிலைப்பாடு.

திமுக வேட்பாளர் கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

வெற்றியை எதிர்பார்த்துதான் திமுக நிற்கிறது.

No comments:

Post a Comment