Tuesday, June 25, 2013
இலங்கை::திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ஏற்பாட்டில் ‘திதுலன கல்முனை’ அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் கணணிக் கூடத்திற்கான அடிக்கல் நடுகை விழா கடந்த சனிக்கிழமை (22.06.2013) பாடசாலையின் அதிபர் ஏ.ஆர்.நிஃமத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான றஊப் ஹக்கீம் கணணிக் கூடத்திற்கான அடிக்கலை நட்டு வைத்தார்.
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று சொல்லும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புலம் பெயர் தமிழர்களிடமிருந்து விடுபட வேண்டும். அதேநேரம் தமது சொந்தக் காலில் நின்று அரசியல் செய்ய முன்வரவேண்டும்.
இவ்வாறு, நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான றவூப் ஹக்கீம் கல்முனையில் நடைபெற்ற 'திதுலன' வேலைத் திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோது தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் எச். எம். எம். ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நீதியமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், மு. கா. மாமூலமான ஒரு கட்சியல்ல. ஒரு விடுதலை இயக்க மாகும். அது சமூகத்தின் உரிமை விடயங் களில் வலுவான தீர்மானங்களை எடுக்கும். இது இக்கட்சிக்கு இருக்கின்ற இயல்பாகும்.
மு.கா. கடந்த மாகாண சபைத் தேர்தலில் ஒரு புரட்சிகரமான தீர்மானத்தை எடுக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் நாங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தோம். தூர நோக்குடன் எடுக்கப்பட்ட முடிவைப் பற்றி பலர் திட்டினார்கள். எமது தாற்பரி யத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பினால் புரிந்துகொள்ள முடியாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைத்து இருந்தால் அரசாங்கத்தில் இருக்க முடியாது. அரசாங்கத்தில் இருப் பதினால்தான் நாம் செய்யும் இந்த போராட்டத்தை மேற்கொள்ள முடிகின்றது. இதனை முஸ்லிம் காங்கிரஸ் தனித்து செய்ய முடியாது. ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்துத் தான் போராட வேண்டியுள்ளது.
பெரும் தேசியவாதிகள் தங்களுடைய வாக்குகளை அள்ளிக்கொண்டு போய் விடுவார்கள் என்ற அச்சம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தை பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிட வேண்டும் என்று பெரும் தேசியவாதிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதனை அரசாங்கம் ஒரு ஆபத்தாக நினைத்து கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலம் பெயர் தமிழர்களின் பிடியிலிருந்து விடுபட வேண்டும். அவர்கள் தமது சொந்தக் காலில் அரசியல் செய்ய முன்வர வேண்டும். அரசியல் யாப்பின்படி இரண்டு மாகாணங்களை மாகாணங்கள் நினைத்த மாதிரி இணைந்து கொள்ள முடியாது. அதனை பாராளுமன்றம் தான் செய்ய வேண்டும். மேலும் ஜனாதிபதியும் அதற்கு ஒப்பமிட வேண்டும்.
பெருந்தேசியவாதிகள் அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் பெரிதாக்கிக் கொண்டிருக்கின்றது.
தற்போது அரசாங்கம் தெரிவுக் குழு ஒன்றினை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்த தெரிவுக் குழுவில் முஸ்லிம் காங்கிரஸை இணைத்துக்கொள்ள வேண்டும். தெரிவுக் குழுவின் நம்பகத்தன்மைக்கு குறைந்த பட்சம் முஸ்லிம் காங்கிரஸாவது இருக்க வேண்டும் என்றார்.


No comments:
Post a Comment