Friday, June 21, 2013

நாட்டின் இறைமைக்கும், மக்கள் வழங்கிய ஆணைக்கும் முன்னுரிமை அளித்தே அரசாங்கம் எந்தத் தீர்மானங்களையும் எடுக்கும்: அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல!

Friday, June 21, 2013
இலங்கை::நாட்டின் இறைமைக்கும், மக்கள் வழங்கிய ஆணைக்கும் முன்னுரிமை அளித்தே அரசாங்கம் எந்தத் தீர்மானங்களையும் எடுக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்றுத் தெரிவித்தார்.
 சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்களுடன் அரசாங்கம் ஒப்பந்தங்களைச் செய்திருந்தாலும், நாட்டு மக்கள் மற்றும் நாட்டின் இறைமையுடன் தொடர்புபட்ட விடயங்களுக்குத் தீர்வு காணும்போது இறைமைக்கும் மக்கள் வழங்கிய ஆணைக்குமே முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்றது. 13வது திருத்தச்சட்டமூலம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இந்த நிலையில் குறித்த 13வது திருத்தச்சட்டமூலத்தை திருத்துவதன் மூலம் அந்த ஒப்பந்தங்களை மீறுவதாக அமையாதா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர், நாட்டின் இறைமை தொடர்பில் சர்வதேச நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்திருந்தாலும், மக்களின் ஆணைக்கும், நாட்டின் இறைமைக்கும் மதிப்பளிக்கும் வகையில் செயற்படவேண்டியது அரசாங்கத்தின் கடமை. மக்களின் இறைமையை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் முக்கியமான கடமையாகும் என்றார். அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஆராய்ந்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். அதிகாரப் பகிர்வில் குறைபாடுகள் உள்ளன. அதிகாரங்கள் கூடுதலாகப் பகிரப்பட வேண்டிய இடங்களுக்குக் கூடுதலாகவும், குறைவாகப் பகிரப்பட வேண்டிய இடங்களுக்குக் குறைவாகவும் பகிர்ந்தளிக்கப்படும். 13வது திருத்தச்சட்டமூலம் திருத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது. இரண்டு மாகாண சபைகளை இணைப்பதற்கு ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களை நீக்குவது தொடர்பான திருத்தம், அரசியலமைப்பின் 19வது திருத்தமாகப் பாராளுமன்றத்தில் எதிர்வரும் சில தினங்களில் முன்வைக்கப்படும். ஏனைய திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்கு தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு ஆராயப்பட்டு தீர்மானம் ஒன்று எடுக்கப்படும்.13வது திருத்தச்சட்டமூலமானது மக்களின் இணக்கப்பாடு இல்லாமல் கொண்டுவரப் பட்டதொரு திருத்தச்சட்டமூலம் என்ற கருத்துக்கள் பரவலாக முன்வைக்கப் படுகின்றன. இது ஒரு வரலாற்றுத் தவறு என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. எதுவாக இருந்தாலும், இதனை மாற்றியமைக்க வேண்டிய சூழல் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.
30வருட யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நாட்டில் சமாதானம் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் இவ்விடயம் தொடர்பாகக் கலந்துரையாடித் தீர்மானமொன்றுக்கு வருவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment