Tuesday, June 25, 2013

மைனர் பெண்ணுடன் பாலியல் உறவு பெர்லுஸ்கோனிக்கு 7 ஆண்டு சிறை!!!

Tuesday, June 25, 2013
மிலன்::மைனர் பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டது, பதவியை பயன்படுத்தி அதை மறைக்கப் பார்த்தது ஆகிய குற்றத்துக்காக, இத்தாலியில் முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் 3 முறை பிரதமர் பதவியில் இருந்தவர் சில்வியோ பெர்லுஸ்கோனி (76), பல பெண்களுடன் தொடர்பு கொண்டவர் என்று பெயர் பெற்றவர். இவர் பதவியில் இருந்தபோது,

இரவு விடுதியில் நடனமாடிக் கொண்டிருந்த இளம்பெண் கரீமா எல் மஹ்ரோவுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டார். மிலன் நகரில் இருந்த பிரதமர் இல்லத்தில் இவரை வைத்து பாலியல் விருந்துகளையும் பெர்லுஸ்கோனி நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும், கரீமா எல் மஹ்ரோ திருட்டு குற்றம் ஒன்றில் போலீசாரிடம் சிக்கியபோது, தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி, அவரை பெர்லுஸ்கோனி விடுவித்ததும் தெரியவந்தது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பெர்லுஸ்கோனி மீது வழக்கு தொடரப்பட்டது.

மிலன் நகர நீதிமன்றத்தில், 3 பெண் நீதிபதிகளை கொண்ட அமர்வு இந்த வழக்குகளை விசாரணை செய்து வந்தது. இந்நிலையில், வழக்கில் நேற்று நீதிபதிகள் தீர்ப்பு கூறினர்.
அதில், பெர்லுஸ்கோனிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும், அவர் அரசு பதவிகளை வகிக்க தடை விதிப்பதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால், இந்த வழக்கில் மேல்முறையீடுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளதால், அதில் தண்டனை உறுதியாகும் வரையில், பெர்லுஸ்கோனி சிறையில் அடைக்கப்பட மாட்டார். இதற்கிடையே, பெர்லுஸ்கோனியின் கட்சியுடன் ஆளும் கட்சி கூட்டணி வைத்துள்ளது. அவரை சிறையில் அடைக்கும்பட்சத்தில் இப்போதைய பிரதமர் என்ரிகோ லெட்டா தலைமையிலான அரசுக்கு சிக்கல் ஏற்படும் என்று கருதப்படுகிறது.

No comments:

Post a Comment