Friday, June 28, 2013
சென்னை::மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க நேற்று நடந்த வாக்குப் பதிவில் 4 அ.தி.மு.க. வேட்பாளர்களான மைத்ரேயன், அர்ஜூனன், ரத்தனவேல், லட்சுமணன் ஆகியோரும், அ.தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் டி.ராஜாவும், எடுத்த எடுப்பிலேயே மிகப் பெரிய வெற்றியை அடைந்தனர். 6-வது எம்.பி.யாக தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார்.
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்ப தற்கான வாக்குப் பதிவு நேற்று சென்னையில் விறுவிறுப்பாக நடந்தது.
முதலமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவி காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. புதிதாக 6 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு நேற்று தேர்தல் நடந்தது.
6 இடங்களுக்கு 7 பேர் போட்டி
அதிமுக சார்பில் மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், டி.ரத்தினவேல், ஆர்.லட்சுமணன் ஆகியோர் போட்டியிட்டனர். அதிமுக ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா போட்டியிட்டார். திமுக சார்பில் கனிமொழியும், தேமுதிக சார்பில் இளங்கோவனும் போட்டியிட்டனர். எதிர்க்கட்சிகள் சார்பில் 6-வது இடத்துக்கு ஒருவரைத்தான் நிறுத்த முடியும் என்ற நிலையில், தி.மு.க சார்பில் கனிமொழியும், தே.மு.தி.க சார்பில் இளங்கோவனும் போட்டியிட்டனர். அதனால் 6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிட்டதால் நேற்று வாக்கு பதிவு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல்:
இதுவரை மாநிலங்களவைக்கு நடந்த தேர்தலில் குறிப்பிட்ட வேட்பாளர்களே நிறுத்தப்பட்டதால் தேர்தல் நடத்தப்படவில்லை. 17 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக தேர்தல் நடந்தது.
தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்தில் உள்ள சட்டசபைக் குழுக் கூட்ட அறை வாக்குச்சாவடி மையமாக மாற்றப்பட்டது. அந்த அறை நேற்று கண்காணிப்பு அதிகாரிகள் அமரவும், எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கவும் தனித்தனி பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தன.
7 வேட்பாளருக்கும் 7 தனித்தனி வாக்கு அறைகள் உருவாக்கப்பட்டிருந்தது.
எம்.எல்.ஏக்கள் தாங்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்களோ, அந்த வேட்பாளரின் பெயரைக் கொண்ட வாக்கு அறைக்குச் சென்று தங்கள் வாக்கைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வாக்குப் பதிவை மேற்பார்வையிட அந்த அறைக்குள் அதிகாரிகளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தலையொட்டி தலைமை செயலக வளாகத்திலும், சட்டபேரவை வளாகத்திலும், வாயிலிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தமிழ்நாட்டில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்-சபை தேர்தல் நடப்பதால், எப்படி வாக்களிக்க வேண்டும் என்று அ.தி.மு.க., தி.மு.க. எம்.எல்.ஏக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.
234 எம்.எல்.ஏ.க்கள் வாக்காளர்களாக இருக்கின்றனர் என்ற அடிப்படையில் அத்துடன் 10 சதவீதம் கூடுதலாக வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டிருந்தன.
வாக்குச்சீட்டில் கீழ்க்கண்ட அகர வரிசைப்படி வேட்பாளர்களின் பெயர்கள் இருந்தன. கே.ஆர்.அர்ஜூணன் (அ.தி.மு.க), ஏ.ஆர்.இளங்கோவன் (தே.மு.தி.க.), இரா.லட்சுமணன் (அ.தி.மு.க.), கனிமொழி (தி.மு.க.), டாக்டர் வா.மைத்ரேயன் (அ.தி.மு.க.), த.ரத்தினவேல் (அ.தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு) வாக்குச்சீட்டில் 7 வேட்பாளர்களின் வரிசையில் இருந்தது. வெள்ளை நிறத்தில் உள்ள வாக்குச்சீட்டில் வேட்பாளர்களின் பெயர்கள் கருப்பு நிறத்தில் அச்சிடப்பட்டிருந்தன.
எம்.எல்.ஏக்கள் தங்கள் வாக்கைப் பதிவு செய்ததும், தங்கள் கட்சி சார்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஏஜெண்டிடம் காண்பிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஒவ்வொரு எல்.எல்.ஏயும் தாங்கள் யாருக்கு வாக்களித்துள்ளோம் என்பதை ஏஜெண்டிடம் காண்பித்தனர்.
அ.தி.மு.க. சார்பில் செம்மலையும், ஆர்.பி.உதயகுமாரும், தி.மு.க சார்பில் கம்பம் ராமகிருஷ்ணனும், எஸ்.எஸ்.சிவசங்கரும், காங்கிரஸ் சார்பில் ஜான் ஜேக்கப், தே.மு.தி.க சார்பில் வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் பாக்கியம், மனித நேய மக்கள் கட்சி சார்பில் கம்சுதீன், புதிய தமிழகம் கட்சி சார்பில் வக்கீல் பாஸ்கர் மதுரம், பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் முத்துராமலிங்கம் ஆகியோர் கட்சிகள் சார்பிலான ஏஜெண்டுகளாக இருந்தனர்.
வாக்குச்சாவடி ஏஜெண்டுகளாக அ.தி.மு.க சார்பில் தம்பித்துரை, சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், தி.மு.க. சார்பில் எ.வ.வேலு, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஆறுமுகம் ஆகிய 4 பேர் அமர்ந்திருந்தனர்.
எம்.எல்.ஏக்கள் தாங்கள் தேர்வு செய்ய விரும்பிய வேட்பாளர் பெயருக்கு எதிரில் ஊதா நிற மையால் 1 என்ற எண்ணை குறிப்பிட்டனர்.
இந்த தேர்தலில் வாக்கு அளிப்பதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா காலை 11.20 மணிக்கு சட்டசபை வளாகத்திற்கு வந்தார். அப்போது அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை வரவேற்றனர். காலை 11.25 மணிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா முதலாவதாக வாக்களித்தார். அவரைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக சென்று வாக்களித்தனர். அதிமுகவைத் தொடர்ந்து அதன் தோழமை கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி, சரத்குமார் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
ஒரு எம்.பியை தேர்ந்து எடுக்க 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்பதால் அ.தி.மு.கவைச் சேர்ந்த 151 எம்.எல்.ஏக்களும் தலா 34 எம்.எல்.ஏக்களாக பிரிக்கப்பட்டிருந்தனர். அதன்படி அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேட்பாளர் அறைக்கு குழு, குழுவாக சென்று வாக்களித்தனர்.
தி.மு.க எம்.எல்.ஏக்கள் கருணாநிதி தலைமையில் வந்து அவர்களின் வேட்பாளர் கனிமொழிக்கு வாக்களித்தனர். அவர்களைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திமுக உறுப்பினர்களும், விஜயகாந்த் தலைமையில் தேமுதிக உறுப்பினர் களும், காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சி எம்எல்ஏக்களும் வாக்களித்தனர்.
தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏக்கள், மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.
இடது சாரி கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள டி.ராஜாவுக்கு வாக்களித்தனர். ஏற்கனவே திட்டமிட்டப்படி அ.தி.மு.க எம்.எல்.ஏக்களில் ஒருசாராரும் டி.ராஜாவுக்கு ஆதரவாக தங்கள் வாக்கை பதிவு செய்தனர். தேமுதிக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ஓட்டுப்போட வந்திருந்தனர்.
மதியத்துக்குள் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் தங்கள் வாக்கை பதிவு செய்து விட்டனர். பா.ம.கவின் 3 எம்.எல்.ஏக்கள் ஏற்கனவே அறிவித்தப்படி வாக்குப் பதிவை புறக்கணித்தனர்.
மாநிலங்களவை தேர்தல் அதிகாரியான சட்டசபை துறை செயலாளர் ஜமாலுதீன் முன்னிலையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
எம்.எல்.ஏக்கள் தங்கள் விருப்ப உரிமை அடிப்படையில் வாக்களித்திருந்தால் மட்டுமே, ஒவ்வொரு வேட்பாளருக்கும் எத்தனை வாக்குகள் கிடைத்துள்ளது என்பதை கணக்கீடு செய்வதில் கூடுதல் நேரம் தேவைப்படும். ஆனால் நேற்று விருப்ப வாக்குகள் அதிகம் இல்லை.
வாக்குகள் எண்ணும் பணி சரியாக 5.00 மணிக்கு தொடங்கியது. கட்சிகளின் தேர்தல் ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்குப் பெட்டிகள் உடைக்கப்பட்டு, வாக்குகள் குவிக்கப்பட்டன. அதன்பின் அவை பிரிக்கப்பட்டன. இதில் ஒரு ஓட்டு செல்லாததாகியது. ஆகையால் 230 வாக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தவுடன் முதல் கட்டமாக வாக்குகள் பிரிக்கும் பணி நடந்தது, அதன்பின் முதலிடம் வாக்குகள் எண்ணப்பட்டன. சிறுது நேரத்திலேயே அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை எடுத்த எடுப்பிலேயே நான்கு வேட்பாளர்களும், இந்திய கம்யூன்ஸ்ட் கட்சி வேட்பாளர் டி.ராஜா ஆகிய 5 பேரும் வெற்றி பெற்றது உறுதியாகியது.
6-வது இடம் கனிமொழிக்கா, தேமுதிகவை சேர்ந்த இளங்கோவனுக்கா என்பதிலும் நிச்சயம் ஏற்பட்டது. ஒரு எம்.எல்.ஏவின் வாக்கு மதிப்பு 3286 ஆகும். முதல் கட்ட வாக்குகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களான அர்ஜூனனுக்கு 36 வாக்குகளும், லட்சுமணனுக்கு 35 வாக்குகளும், மைத்ரேயனுக்கு 36 வாக்குகளும், ரத்தனவேலுக்கு 36 வாக்குகளும், டி.ராஜாவுக்கு 34 வாக்குகளும் கிடைத்தன. கனிமொழிக்கு 31 வாக்குகளும், இளங்கோவனுக்கு 22 வாக்குகள் கிடைத்தன. அதிக வாக்குகள் பெற்றவர்கள், வெற்றி பெற்றவர்களாக கருதப்பட்டது. அதன்படி அ.தி.மு.க. வேட்பாளர்கள் நான்கு பேரும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராஜாவும், கனிமொழியும் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதன் விபரம் டெல்லிக்கு அனுப்பப்பட்டு, டெல்லியில் தேர்தல் ஆணையம் முறைப்படி வெற்றி பெற்ற வேட்பாளர்களை அதிகார பூர்வமாக அறிவிப்பார்.
தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்ற மைத்ரேயன், டி.ராஜா, கனிமொழி ஆகியோர் ஏற்கனவே எம்.பி.க்களா இருந்தவர்கள். அ.தி.மு.க. மற்ற 3 வேட்பாளர்களும் புதிதாக எம்.பியாகி உள்ளனர்.
_0.jpg)
No comments:
Post a Comment