Monday, June 3, 2013

இலங்கை தொழிலதிபர், மனைவி 4 நாட்களுக்கு பிறகு மீட்பு : 8 பேர் கும்பல் கைது!

Monday, June 03, 2013
சென்னை::இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் தவராஜா (50). மனைவி சலஜா (45). இருவரும் லண்டனில் வசிக்கின்றனர். இவர்களது உறவினர்கள் சென்னையில் வசிக்கின்றனர். அவர்களை பார்க்க கடந்த 29ம் தேதி விமானம் மூலம் தவராஜாவும், சலஜாவும் சென்னைக்கு வந்தனர். இருவரையும் அழைத்து வர தவராஜாவின் நண்பரான கொளத்தூர் திருப்பதி நகரை சேர்ந்த குமார் மற்றும் அனந்தராயன் ஆகியோர் அண்ணாநகர் மேற்கு இசட் பிளாக் 19வது தெருவில் உள்ள ஒரு டிராவல்ஸ் காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு சென்றனர்.

நீண்ட நேரம் காத்திருந்தும் இருவரும் வரவில்லை. உடனே மீனம்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். மேலும், அண்ணா நகர் போலீசிலும் குமார் புகார் செய்தார். இதையடுத்து இருவரையும் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் சென்னையில் வசிக்கும் உறவினர் ஒருவருக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், ‘தவராஜா, சலஜாவை விடுவிக்க வேண்டுமானால் ரூ.2.5 கோடி தர வேண்டும். அப்போதுதான் அவர்களை உயிருடன் விடுவோம்‘ என கூறி தொடர்பை துண்டித்தனர்.

இதுபற்றி தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே எங்கிருந்து போன் செய்யப்பட்டது என்பது பற்றி தனிப்படை போலீசார் கண்காணித்தபோது, ‘நெய்வேலியில் இருந்து தொடர்பு கொண்டது‘ தெரிந்தது. உடனே தனிப்படை போலீசார் நெய்வேலிக்கு விரைந்தனர்.தீவிரமாக தேடியதில் குறிப்பிட்ட ஒரு வீட்டில் இருவரும் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.

அங்கு 4 நாட்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த தவராஜாவையும், சலஜாவையும் போலீசார் மீட்டனர். இருவரையும் அடைத்து வைத்து மிரட்டிய கும்பல் தலைவன் கண்ணன் (எ) தர்மலிங்கம், வசந்தன், சதீஷ்குமார், சரவணன், பிரபு, மதியழகன், இந்திரா அந்தோணிமேரி, இளங்கோ ஆகிய 8 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை சென்னைக்கு கொண்டு வந்தனர். அவர்களிடம் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment