Monday, June 3, 2013

குப்தில் 189 ரன் குவித்து சாதனை : தொடரை கைப்பற்றியது நியூசி!!

Monday, June 03, 2013
நியூசிலாந்து::நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. லண்டனில் நடந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது. 2வது ஒருநாள் போட்டி சவுதம்டனில் நடந்தது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் மெக்குலம் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். குப்திலும், ரோஞ்சியும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 3வது ஓவரிலேயே ரோஞ்சி 2 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் வில்லியம்சன் களமிறங்கினார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர். வில்லியம்சன் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து குப்திலுக்கு ஜோடியாக டெய்லர் களமிறங்கினார். அவரும் தன் பங்கிற்கு 60 ரன் அடித்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் குப்தில் சிறப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்தினார். சதம் அடித்த அவர் இறுதி கட்டத்தில் விஸ்வரூபம் எடுத்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். 155 பந்துகளை சந்தித்து 189 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 26 வயதான குப்திலுக்கு இது 4வது சதமாகும். ஏற்கனவே முதல் போட்டியில் 103 ரன் எடுத்தது குறிப்பிடத்தக்கதாகும். ஒருநாள்

மேலும் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார். மேலும் விவியன் ரிச்சர்ட்சின் (189 ரன்) சாதனையையும் அவர் சமன் செய்தார். 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன் குவித்தது. கேப்டன் மெக்குலம் 40 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் கடினமான இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. கேப்டன் குக்கும், பெல்லும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தொடக்கம் சிறப்பாக அமைந்தது என்றாலும் குக் 34 ரன்னுக்கும், பெல் 25 ரன்னுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

3வது வீரராக களமிறங்கிய ட்ராட் பொறுப்புடன் ஆடினார். அவர் ஒருமுனையில் நிதானமாக ஆடினாலும் மறுமுனையில் வீரர்கள் யாரும் நிலைக்கவில்லை. ரூட் 28 ரன்னுக்கும், மோர்கன் 21 ரன்னுக்கும், பட்லர் 2 ரன்னுக்கும், வோக்ஸ் 13 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். ட்ராட் 104 பந்தில் 109 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 44.1 ஓவரில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 273 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 86 ரன் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடைசி ஒருநாள் போட்டி ஜூன் 5-ம் தேதி நாட்டிங்காமில் நடக்கிறது. 189 ரன்கள் குவித்த குப்தில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

போட்டியில் அடுத்தடுத்து 2 சதங்கள் அடித்த 3வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பாக கிரேட் பேட்ச், ராஸ் டெய்லரும் இந்த சாதனையை படைத்திருந்தனர்.

No comments:

Post a Comment