Tuesday, June 18, 2013

13ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதா இல்லையா என்பதை தீர்மானிப்பது ஜெனிவாவோ ஜெயலலிதாவோ அல்லது வை.கோ.வோ அல்ல இந்த நாட்டு மக்களே அதனைத்தீர்மானிக்க வேண்டும்: கெஹெலிய ரம்புக்வெல்ல!

Tuesday, June 18, 2013
இலங்கை::13ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதா இல்லையா என்பதை தீர்மானிப்பது ஜெனிவாவோ ஜெயலலிதாவோ அல்லது வை.கோ.வோ அல்ல இந்த நாட்டு மக்களே அதனைத்தீர்மானிக்க வேண்டும்: கெஹெலிய ரம்புக்வெல்ல!
 
13ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதா இல்லையா என்பதை தீர்மானிப்பது ஜெனிவாவோ ஜெயலலிதாவோ அல்லது வை.கோ.வோ அல்ல இந்த நாட்டு மக்களே அதனைத்தீர்மானிக்க வேண்டும். ஏனென்றால் இந்த நாட்டின் இறைமையைக் கட்டிக் காக்கும் பாரிய பொறுப்பு அவர்களையே சார்ந்ததாகும்.
 
 இந்த நாடு எக்காரணம் கொண்டும் இந்தியாவின் ஒரு பிராந்தியமாகவோ அல்லது அமெரிக்காவின் ஒரு பிராந்தியமாகவோ மாறுவதை நாம் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கத் தயாரில்லை என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை மாத்தளை வாடிவீட்டில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அகில இலங்கை பிரதேச சபைத் தலைவர்களின் சம்மேளனத் தலைவரும் - புரசிரிவர சமூக சேவை அமைப்பின் பணிப்பாளர் நாயகமுமான நிமல் ஜயவர்தனவின் ஏற்பாட்டில் கட்டார் நாட்டில் பணி புரிவதற்காகத் தெரிவு செய்யப்பட்ட 50 கட்டிடக்கலை நிபுணர்களுக்கு இலவசமாக நியமனக்கடிதங்களைக் கையளிப்பதற்காக மேற்படி வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
ஊடக அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய போது,
 
அதிகாரத்தைப் பகிர்வது பற்றி எமக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் அது எந்த வகையில் அமைய வேண்டுமென்பதை நாமே முடிவு செய்வோம். காலத்துக்கு ஏற்ற வகையிலான மாற்றங்களே தேவை. நந்திக்கடல் பிரதேசத்தில் பிரபாகரன் கொலை செய்யப்பட பின் அவரது ஆயுதங்களை இன்று சம்பந்தனே கையிலேந்தியுள்ளார். இதைக் கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும் யாருடன் வே
ண்டுமானாலும் பேசட்டும் இது அவருக்கு இருக்கின்ற ஜனநாயக உரிமை.
 
ஆனால் எந்த முடிவை எடுக்க வேண்டுமானாலும் அதனை மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்ப நாமே மேற்கொள்வோம். பிரபாகரன் அழிக்கப்பட்டதோடு கொலைக் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இதன் பின் நாம் அரசியல் செய்யவில்லை. அபிவிருத்தியே செய்து வருகிறோம். இன்று மக்களுக்கு சுதந்திரமாக சுவாசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் உருவான அணிசேரா நாடுகளுடனான தொடர்புகள் காரணமாகவே இன்று சுமார் 20 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாட்டில் தொழில் செய்கின்றனர். அவர்கள் மூலம் இந்த நாட்டுக்குக் கிடைக்கும் அந்நிய செலாவணி இல்லாவிட்டால் நம்மால் யுத்தத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போயிருக்கும்.
 
எரிபொருள் தேவைகளைக் கூட ஈடு செய்ய முடியாமல் போயிருக்கும்.
ஓய்வூதியம் பெறும் அரச ஊழியர்களையும் சேர்த்தால் இன்று நாட்டில் 20 இலட்சம் பேர் அதாவது முழு ஜனத்தொகையில் 10 சதவீதத்தினர் இன்று அரச ஊழியம் பெற்று வருகின்றனர். அரச சேவையைப் பலப்படுத்த வேண்டுமென்பதே ஜனாதிபதியின் நோக்கம். பணம் கறந்து மோசடி செய்யும் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பு ஏஜென்ஸி நிறுவனங்கள் நிறைந்துள்ள நிலையில் இலவசமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவது ஒரு பாரிய சேவையாகும் எனக்குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment