Wednesday,June 12, 2013
இலங்கை::வடமாகாண சபைக்குத் தேர்தலொன்றை நடத்த முன்னர் 13வது திருத்தச்சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என முதலீட்டு ஊக்குவிப்புப் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
இலங்கை::வடமாகாண சபைக்குத் தேர்தலொன்றை நடத்த முன்னர் 13வது திருத்தச்சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என முதலீட்டு ஊக்குவிப்புப் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
13வது திருத்தச்சட்டமூலத்தில் உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் குறித்த சரத்துக்கள் திருத்தியமைக்கப்பட வேண்டும்.
உரிய மாற்றங்களைச் செய்யாமல் வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதானது நாட்டின் இறைமைக்குப் பாதிப்பாக அமையும் என்பதே தனது தனிப்பட்ட கருத்து என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பு உலக வர்த்தக மையக் கட்டடத்தொகுதியில் உள்ள அமைச்சில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்துரைத்த அமைச்சர்,
சிறுபான்மை, பெரும்பான்மை இனங்கள் என்ற வேறுபாடு இன்றி நாட்டிலுள்ள அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் இணைந்து செயற்பட வேண்டிய காலம் தற்பொழுது தோன்றியுள்ளது. இந்த நிலையில் 13வது திருத்தச்சட்டமூலத்தில் திருத்தங்களைக் கொண்டு வரவேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு திருத்தங்களைக் கொண்டு வருவதானது சிறுபான்மை இன மக்களுக்கும் நன்மை பகிர்ப்பதாக அமையும்.
தேசிய ரீதியில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு அனைத்துக் கட்சிகளும் முன்வரவேண்டும்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவைத் தவிர வேறெந்த மேடையும் சிறப்பான தளமாக அமைய முடியாது. இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இருந்தபோது அப்போதைய முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் ஈழப் பிரகடனம் செய்தார். தமிழ்த் தேசிய இராணுவம் உருவாக்கப்பட்டது. கடந்த காலத்தில் நமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு நாம் செயற்பட வேண்டியுள்ளது.
13வது திருத்தச்சட்டமூலத்தின் கீழ் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பதாயின் முதலமைச்சரே நியமிக்க வேண்டும் அல்லது பொலிஸ் ஆணைக்குழுவின் மூலம் அந்த நியமனம் இடம்பெற வேண்டும். அதேபோல காணி விடயமொன்றில் நடவடிக்கை எடுப்பதாயின் ஜனாதிபதி கூட முதலமைச்சரின் ஆலோசனையுடனேயே தீர்மானிக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் 13வது திருத்தச்சட்டமூலமானது திருத்தியமைக்கப்பட வேண்டும்.
ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் வடமாகாணசபைத் தேர்தலில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எமக்குப் பாதிப்பு இல்லை. எனினும், அங்கு தேர்தல் நடத்தப்பட முன்னர் 13வது திருத்தச்சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமானது.
வடக்கில் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் குறித்துக் குரல் கொடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்துக் குரல் கொடுப்பதில்லை. இவ்வாறான நிலையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்று காண்பதில் அக்கறையுடைய கட்சிகள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வந்து பேச்சு நடத்தித் தீர்வொன்றைகாண முடியும். இதனையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் வலியுறுத்தி வருகின்றார் என்றும் கூறினார்.

No comments:
Post a Comment