புலிகள் தாக்குதலால் 103 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட காத்தான்குடி பள்ளிவாயல் புனர் நிர்மாணம். அதேவேளை தாக்குதல் தடயங்கள்!
Thursday, June 06, 2013
இலங்கை::இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளிற்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் கிறிஸ்டின் றொபிச்சன் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி.சிராஸ் மீராசாஹிபின் அழைப்பின் பேரில் செவ்வாய் க்கிழமை மாநகர சபைக்கு வருகை தந்தார்.
இதன்போது கல்முனை மாநகர சபையின் நடவடிக்கைகள் மற்றும் இங்கு வாழும் சமூகங்களுக்கிடையில் காணப்படும் இன நல்லுறவு போன்ற விடயங்கள் தொடர்பாக முதல்வரினால் தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. அத்தோடு கல்முனை மாநகரத்திற்கான மாநகர அபிவிருத்தி திட்ட வரைபு முதல்வரினால் தூதுவரிடம் கையளிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர கணக்காளர் எல்.ரீ.சாலிதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
103 முஸ்லிம்கள் மீது 1990ஆம் ஆண்டு புலிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட காத்தான்குடி பள்ளிவாயலுக்கு பிரான்ஸ் தூதுவர் விஜயம்!
காத்தான்குடி பள்ளிவாயலில் இஷாத் தொழுகை நிறை வேற்றிக் கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் மீது 1990ஆம் ஆண்டு புலிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலுக்கு இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபின்சொன் செவ்வாய் க்கிழமை விஜயம் செய்தார்.
அங்கு விஜயம் செய்த பிரான்ஸ் தூதுவர் பள்ளிவாயலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் பற்றி கேட்டறிந்து கொண்டதுடன் பள்ளிவாயலில் தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளை பார்வையிட்டு அதனை புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
தற்போது குறித்த பள்ளிவாயலில் இருக்கும் தாக்குதல் நடாத்தப்ட்ட தடயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் மாத்திரம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ் அக்ரெட் (ACTED) நிறுவனத்தினால் இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவின் பயணாளிகளை பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபின்சொன் நேரில் சென்று சந்தித்து திட்டம் தொடர்பாக கலந்துரையாடியதுடன் தொழில் முயற்சிகளையும் நேரில் பார்வையிட்டார்.
இவ்விஜயத்தின் போது இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரின் செயலாளரும்,அக்ரெட் (ACTED) நிறுவனத்தின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.ஹஜேந்திரன் மற்றும் மாவட்ட நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எச்.எம். தாஜுல் பலாஹ் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்...
கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபின்சொன் விஜயம்!
மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபின்சொன் இன்று காலை கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பில் உபவேந்தர் கலாநிதி கிட்னன் கோவிந்தராஜா, பதிவாளர் கே. மகேசன், மற்றும் பீடாதிபதிகளும் கலந்து கொண்டனர்.
சந்திப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த உபவேந்தர் கலாநிதி கிட்னன் கோவிந்தராஜா கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், எதிர்கால வேலைத்திட்டங்கள், அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். அத்துடன் கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சமூகத்திற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்வது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
அதே நேரம், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மூன்று இன மாணவர்களையும் சந்தித்து அவர்களது பிரச்சினைகள், தேவைகள் பற்றியும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபின்சொன் அம்மையார் கேட்டறிந்து கொண்டார்.
மாணவர்கள், போக்குவரத்துப்பிரச்சினைகள் மற்றும் தங்களது பல்கலைக்கழகத் தேவைகள் குறித்து தூதுவருடன் பகிர்ந்து கொண்டனர்.






No comments:
Post a Comment