Saturday, May 11, 2013

எல்லை தாண்டி வந்தால் கைது உறுதி ; மீனவர்களுக்கு இலங்கை எச்சரிக்கை!

Saturday, May 11, 2013
ராமேஸ்வரம்::தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால், சிறையில் அடைக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும்' என, இலங்கை அரசின் எச்சரிக்கையால், ராமேஸ்வரம் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். மீன்வளம் நிறைந்த கடல் எல்லையில், மீன் பிடித்து வரும் ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைப்பது, வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில், "தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால், படகு பறிமுதல் செய்யப்படும். மீனவர்களை, 90 நாட்கள் சிறையில் அடைத்து, அபராதம் விதிக்கப்படும்' என, நேற்று முன்தினம், இலங்கை அரசு அறிவித்துள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள், 45 நாட்கள் தடை காலம் முடிந்து, மே 31 ம் தேதி மீன்பிடிக்க செல்ல உள்ளனர்; இந்நிலையில், இலங்கையின் எச்சரிக்கையால், மீனவர்கள் பீதியில் உள்ளனர்.
இதுகுறித்து, ராமேஸ்வரத்தில் நடந்த கூட்டத்தில், மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் பேசுகையில், ""மீனவர்கள் எல்லை தாண்டி, இலங்கை கடல் பகுதிக்கு வரும் தமிழக மீனவர்களை சிறையில் அடைக்கவும், அபராதம் விதிக்கவும், இலங்கை முடிவெடுத்து உள்ளது. மத்திய, மாநில அரசுகள், இலங்கை அரசிடம் பேச்சு நடத்த வேண்டும்.இதன் பின் தான், மீன்பிடிக்க செல்ல முடியும்,'' என்றார். சங்க நிர்வாகி எமிரிட் பேசியதாவது:

தடைகாலத்தில், படகை சீரமைக்க, பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளோம். ஆனால், தமிழக மீனவர்களை நசுக்கும் வகையில், இலங்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தடை காலத்திற்கு பின், மீன்பிடிக்க சென்றால் கைதாவது உறுதி. மீனவர்கள் பிரச்சனையை, மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை. நம்மை பாதுகாப்பது குறித்து, அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல, அறவழி போராட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment