Thursday, May 16, 2013

நோர்வேக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் நிலைமை ஏற்படக் கூடிய அபாயம் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது!

Thursday, May 16, 2013
இலங்கை::நோர்வேக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் நிலைமை ஏற்படக் கூடிய அபாயம் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கான நோர்வே தூதரகத்தில் கடமையாற்றிய முக்கிய ராஜதந்திரிகளுக்கு எதிராக இலங்கை நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கை விசாரணை செய்த மாவட்ட மேலதிக நீதவான் அமலீ ரணவீர, குறித்த ராஜதந்திரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் என அறிவித்துள்ளார். இலங்கைக்கான முன்னாள் நோர்வே தூதுவர் ஹில்டே ஹராஸ்டல்ட் உள்ளிட்ட சிலருக்கு எதிராக நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று நம்பிக்கை மோசடி தொடர்பில் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றை நடாத்துவதற்கு தேவையான நிதி உதவிகளை வழங்குவதாக உறுதியளித்து, பின்னர் பணம் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, சகவாழ்வு மன்றம் என்ற அமைப்பினால் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தன்னார்வ தொண்டு நிறுவனத் தலைவர் குமார் ரூபசிங்க, முன்னாள் நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நிதி உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திட்டங்கள் முன்னெடுக்கப்டப்பட்டதாகவும் இதனால் ஏற்பட்ட நிதி நட்டத்திற்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமெனவும் குமார் ரூபசிங்க தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இதேவேளை, இலங்கை நீதிமன்றில் குறித்த ராஜதந்திரிகளுக்கு அழைப்பாணை பிறப்பிக்கும் வகையில் விடுக்கப்பட்ட அறிவிப்பு நோர்வே அரசாங்கத்தை அதிருப்தி அடையச் செய்துள்ளது. குறித்த அதிகாரிகள் ராஜதந்திர வரப்பிரசாதம் உடையவர்கள் எனவும் அவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தண்டனை அளிக்க முடியாது னஎவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கு தொடரப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் பாரியள விரிசல் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் நோர்வே தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த விடயம் குறித்து நோர்வே தரப்பில் உத்தியோகபூர்வமான அறிவிப்புகள் வெளியாகவில்லை.

No comments:

Post a Comment