Tuesday, May 7, 2013

தமிழக தொழில் முனைவோரை வரவேற்கும் வகையில் தமிழக முதல்வர் சலுகைகள் அறிவிப்பு!

Tuesday, May 07, 2013
சென்னை::தமிழக தொழில் முனைவோரை வரவேற்கும் வகையில் தமிழக முதல்வர் சலுகைகளை அறிவித்துள்ளார்.
 
தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரையில், தென் மாவட்டங்களில் தற்போது உள்ள மற்றும் அமைய உள்ள சிப்காட் தொழிற் பூங்காக்களில் தொழிற்சாலைகளை அமைக்க முன் வரும் தொழில் முனைவர்களை ஊக்குவிக்கும் வகையில் கீழ்க்காணும் சலுகைகள் அளிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
சிப்காட் நிறுவனத்தால் 50 சதவிகித மானிய விலையில் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும். இம்மானியம் சிப்காட் நிறுவனத்திற்கு அரசால் நேரடியாக திரும்ப அளிக்கப்படும்.  நிலம்  பத்திர பதிவுக்கான முத்திரைத் தாள் கட்டணத்தில் 100 சதவிகித விலக்கு அளிக்கப்படும். மூலதன மானியம் 1.5 மடங்கிலிருந்து 2 மடங்காக அதிகரிக்கப்படும். தொழிற்சாலைகளுக்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்படும்.
மதிப்புக் கூட்டிய வரி அடிப்படையிலான சலுகைகள்  பெற தற்போது நடைமுறையில் உள்ள குறைந்த பட்ச முதலீட்டுத் தொகையான 50 கோடி ரூபாய் என்பது 10 கோடி ரூபாயாக குறைக்கப்படும்.
 
மேற்காணும் நடவடிக்கைகள் தென் தமிழ்நாட்டில் தொழில் முனைவோர்கள் அதிக அளவில் உருவாகவும், வேலைவாய்ப்புகள் மேலும் பெருகவும், தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முதல் இடத்தை எய்தவும் வழி வகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

No comments:

Post a Comment