Tuesday, May 07, 2013
சென்னை::இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களுக்கு மீண்டும் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்:-
தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சியினரும் மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி, இந்தப் பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்ட போதிலும், தமிழக மீனவர்களுக்கு விடிவு ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
இலங்கை அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர், எப்படியும் இந்த முறை விடுவிக்கப்பட்டு விடுவோம் என்ற நம்பிக்கையோடு இருந்த நேரத்தில், மூன்றாவது முறையாக மன்னார் மாவட்ட நீதி மன்றத்தில் 6-5-2013 வரை இவர்களுக்கு காவல் நீடிப்பு செய்யப்பட்டிருந்தது. 6ஆம் தேதி விடுவிக்கப்படுவோம் என்று அந்த மீனவர்களும், இங்கேயுள்ள ராமேஸ்வரம் மீனவர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்றைய தினம் அவர்களுக்கு மீண்டும் மே 20ஆம் தேதி வரை காவல் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது, கொடுமையிலும் கொடுமையான செய்தியாகும்.
காவல் நீடிப்புக்கு நீதிபதி சொல்லியிருக்கின்ற காரணம், மீனவர்கள் கைது தொடர்பாக போதுமான ஆவணங்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கல் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.
இலங்கைக் கடற்படையினர் ஆவணங்களைத் தாக்கல் செய்யாதது யாருடைய குற்றம்? எப்படியோ நான்காவது முறையாக ராமேஸ்வரம் மீனவர்களுக்கு காவல் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி மத்திய, மாநில அரசுகள் தான் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை அரசின் கவனத்திற்கு இந்தப் பிரச்சினையை மத்திய அரசு இனியாவது கொண்டு சென்று, ராமேஸ்வரம் மீனவர்களின் இந்தப்
பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்று மீண்டும் மீண்டும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். ராமேஸ்வரம் மீனவர்கள் மாத்திரமல்ல; ஏப்ரல் 5ஆம் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, புதுவை-காரைக்காலைச் சேர்ந்த 26 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து, ஊர்க்காவல் துறை நீதி மன்றத்திலே ஆஜர்படுத்தி, அவர்களையும் சிறையிலே அடைத்திருக்கிறார்கள்.
நீதி மன்றம் அவர்களை மே 29ஆம் தேதி வரை சிறையிலே அடைக்க உத்தரவிட்டு அவர்களும் சிறையிலே இலங்கையிலே இருந்து வருகிறார்கள்.
அவர்களின் பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட வேண்டும். சிறையிலே அடைபட்டுள்ள இந்த இந்திய மீனவர்களின் பிரச்சினை ஒரு புறமிருக்க, மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள இந்த கால கட்டத்தில், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையே சுரண்டக் கூடிய வகையில் செல்வாக்கு படைத்த ஒரு சிலர் மட்டும் தொழில் ரீதியான மீன்பிடிக் கப்பல்களைப் பயன்படுத்திக் கொண்டு இந்திய எல்லைக்குள் மீன் பிடிப்பதற்கு அனுமதி பெற்றுள்ளதை தென்னிந்திய மீனவர்கள் சங்கம் கண்டித்திருக்கிறது.
மீன் உற்பத்தியை மனதிலே கொண்டு, தமிழக மீனவர்கள் எல்லாம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மே 29ஆம் தேதி வரை மீன் பிடிக்கச் செல்லக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ள காலத்தில் ஒரு சிலருக்கு மட்டும் மீன்பிடிக்க அனுமதி அளித்திருப்பது என்பது சாதாரண, சாமான்ய மீனவர்களைப் பெரிதும் பாதிக்கக் கூடிய செயல் அல்லவா? எனவே இந்தப் பிரச்சினையிலே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, தற்போது செல்வாக்குள்ள ஒரு சிலர் மட்டும் மீன் பிடிக்க அனுமதி அளித்திருப்பதைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.

No comments:
Post a Comment