Monday, May 20, 2013
இலங்கை::யாழ்.வலிகாமம் பிரதேசத்தில் மக்களுக்குச் சொந்தமான 6381 ஏக்கர் காணியை அரசாங்கம் அநீதியான முறையில் சுவீகரிப்பதற்கு முயற்சிப்பதாக தெரிவித்து 1474 பேர் தாக்கல் செய்துள்ள மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் எஸ்.ஸ்கந்தராஜா முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் மிகவும் அத்தியவசிய தேவைக்காக எனத் தெரிவித்து காணி சுவீகரிப்பு சட்டத்தின் 38 ஆவது சரத்திற்கு அமைய துரிதமாக அந்தக் காணியை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைளை அரசாங்கம் மேற்கொண்டுவருவதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனகீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட நிலைமை என்பதால் அதனை மனுவில் உள்ளடக்க முடியாமற்போயுள்ளதாக சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அந்த விடயத்தையும் உள்ளடக்கி மனுவில் திருத்தம் மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ள நிவாரணங்களை வழங்குமாறும் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கவனம் செலுத்திய நீதிமன்றம், மனுவில் திருத்தம் மேற்கொண்டு அதனை இம்மாதம் 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் தெரியப்படுத்துமாறு அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment