Monday, May 20, 2013
புதுச்சேரி::கடலூரில் சீமான் பொதுக்கூட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது சரியானது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடலூரில் பொதுக்கூட்டம் நடத்த தமிழக அரசின் அனுமதி கேட்டிருந்தார். அந்த கூட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது நியாயமானது. ஏனென்றால் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கம். அந்த இயக்க தலைவரின் படத்தை போஸ்டரில் வெளியிட்டு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
புதுவை மாநிலத்தில் ஏற்கனவே இறையாண்மைக்கு எதிராகவும், பிரிவினையை தூண்டும் வகையிலும் பேசியுள்ளார். சீமானை பொறுத்தவரை அவர் சிறை செல்வது சர்வ சாதாரணம். அவரும் ஜெயிலில் இருக்கவே விரும்புகிறார். எனவே தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரியானது.
பாராளுமன்ற கூட்டத்தை நடத்த விடாமல் பாரதீய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது. கூட்டத்தை நடத்த விடமாட்டோம் என்று பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதன் மூலம் பாரதீய ஜனதாவிற்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று தெரிகிறது.
தற்போது ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ள உணவு பாதுகாப்பு சட்டம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உள்ளது. இது மட்டுமில்லாமல் வங்கி, இன்சூரன்ஸ், பென்சன் ஆகியவற்றில் சீர்திருத்தம் கொண்டு வரும் மசோதாக்களும் நிலுவையில் உள்ளன.
இந்த மசோதாக்கள் நிறைவேறாத பட்சத்தில் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே பாராளுமன்ற கூட்டத்தை நடத்த எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
காரைக்காலில் விவசாயிகள் காவிரி நீர் வராததாலும், வறட்சியாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி பெற புதுவை அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருப்பினும் இடைக்கால நிவாரணமாக ரூ.6100 கோடியை புதுவை அரசுக்கு வழங்க வேண்டும் என்று நான் கேட்டுள்ளேன்.
பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தற்போது மின் கட்டண உயர்வாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண மக்கள் ரூ.4 ஆயிரம் வரை மின்கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். எனவே புதுவை அரசு மின்
கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.3 ஆயிரம் கோடியும், அதற்கு முந்தைய ஆண்டு 2750 கோடியும் திட்டக்குழுவில் இருந்து பெற்றோம். ஆனால் தற்போது ஆட்சியாளர்கள் ரூ.2 ஆயிரம் கோடி மட்டுமே கேட்டுள்ளனர். ஏற்கனவே பெற்ற நிதியில் 45 சதவீதம் மட்டுமே அரசு செலவு செய்துள்ளது. இது ஆட்சியாளர்களுக்கு திறமை இல்லை என்பதையே காட்டுகிறது. எனவே மத்திய அரசை குறை கூறாமல் திட்டங்களை தீட்டி நிதியை பெற புதுவை அரசு முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment