Tuesday, May 21, 2013

கச்சத்தீவு தீர்மானம்; ஜெ பிரதமருக்கு கடிதம்!

Tuesday, May 21, 2013
சென்னை::கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில், தமிழக சட்டப்பேரவையில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொடூரத் தாக்குதல்களையும், துன்புறுத்தல்களையும், சிறைபுடிக்கும் நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டு, பெருவாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது சட்டப்படி செல்லத்தக்கது அல்ல என்பதாலும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், இந்த பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையிலும், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை நாட்டுக்கு ஒப்படைக்கப்பட்ட கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை இந்தியா தனது ஆளுகையின் கீழ் கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியப் பேரரசை தமிழக சட்டப்பேரவை வலியுறுத்துகிறது என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே, இதனை உங்களது கவனத்துக்குக் கொண்டு வருவதுடன், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.           
 

No comments:

Post a Comment