Monday, May 20, 2013
மாஸ்கோ::உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட அமெரிக்க தூதரக ஊழியர், ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரக ஊழியர் ரெயான் போகில் (29). ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ரெயான் 3வது நிலை செயலாளராக பணிபுரிந்தார். ரஷ்ய நாட்டின் புலனாய்வு துறை அதிகாரி ஒருவரை, அமெரிக்காவுக்கு ஆதரவாக உளவு பார்க்கும் வேலையில் ஈடுபட வைக்க முயற்சிப்பதாக ரெயான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ரெயான் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், நாட்டை விட்டு அவர் வெளியேற்றப்பட்டதாக ரஷ்ய டிவி செய்தி வெளியிட்டுள்ளது.
மாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை கடந்து ரெயான் விமானத்துக்கு செல்லும் காட்சிகளை டிவி வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 15ம் தேதி அமெரிக்காவின் போஸ்டன் நகரில் நடந்த மராத்தான் ஓட்டத்தில் 2 குண்டுகள் வெடித்தன. இதில் தொடர்புடைய நபர்கள் ரஷ்யா காசகஸ் பகுதியில் இருந்து வந்தவர்கள். அந்த நபர்கள் குறித்து ரெயான் விசாரிக்க வந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
காசகஸ் பகுதியில் உள்ள ரஷ்ய உளவு துறை அதிகாரி ஒருவரை ரெயான் தொடர்பு கொண்ட போது கைது செய்யப்பட்டுள்ளார். தூதரக விதிமுறைகளை மீறியதாக ரஷ்ய அரசு அவரை நாட்டை விட்டு வெளியேற்றி உள்ளது. அமெரிக்க அரசும் ரெயான் தனது நாட்டு தூதர்தான் என்று உறுதி செய்தது. ஆனால் அவர் எந்த வேலையில் இருந்தார் என்பதை தெரிவிக்கவில்லை.

No comments:
Post a Comment