Thursday, May 2, 2013

4 மேம்பாலங்களுக்கு கீழே குறுகிய சாலையில் சைக்கிளுக்கு தனி பாதை!

Thursday, May 02, 2013
சென்னை::சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் பெருக்கம், வாகன நெருக்கம் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்துவிட்டது. காலை, மாலை வேளையில் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அலுவலகம், பள்ளி செல்வோர் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்லமுடியவில்லை. முக்கிய சாலை சந்திப்புகளில் மேம்பாலம் கட்டினால் நெரிசலை குறைக்கலாம் என்பதால் புரசைவாக்கம், வில்லிவாக்கம், ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, எழும்பூர் உள்ளிட்ட 13 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது.'

இந்த மேம்பாலங்களின் கீழ் பக்கம் உள்ள சர்வீஸ் சாலைகளில் தற்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட தொடங்கி விட்டது. நேர் வழியில் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தை பயன்படுத்திய நிலையில், சர்வீஸ் சாலையை கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகளுக்கு செல்லும் வாகனங்கள் அடைத்து கொள்ளத்தொடங்கியதே இதற்கு காரணம். சில நேரங்களில் மேம்பாலங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுகிறது. பொதுமக்கள் நடந்தும் செல்ல முடியவில்லை.

இதையடுத்து 2013,14ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பில் 4 மேம்பாலங்களின் கீழ் உள்ள சர்வீஸ் சாலைகளில் நடந்து செல்வோருக்கும் சைக்கிளில் செல்வோருக்கும் தனி தனிப்பாதை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக டி.டி.கே சாலை மற்றும் சி.பி ராமசாமி சாலை சந்திப்பில் உள்ள மேம்பாலம், சர்தார் பட்டேல் சாலை மற்றும் எல்.பி சாலை சந்திப்பு மேம்பாலம், பீட்டர்ஸ் சாலை மற்றும் கான்ரான்ஸ்மித் சாலை சந்திப்பு மேம்பாலம், சர்தார் பட்டேல் சாலை மற்றும் காந்தி மண்டபம் சாலை சந்திப்பு மேம்பாலம் ஆகிய 4 மேம்பாலங்களின் கீழ் உள்ள சர்வீஸ் சாலைகளில் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியாகி 2 மாதங்களாகியும் சம்பந்தப்பட்ட சர்வீஸ் சாலைகளில் எவ்வித பணிகளும் இதுவரை தொடங்கப்படவில்லை. இதற்கு வழியே இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது இந்த 4 மேம்பாலங்களின் கீழ் உள்ள சர்வீஸ் சாலைகளும் மிக மிக அகலம் குறைந்த சாலைகள். சென்டர் மீடியனும் உள்ளது. இதில் பக்கவாட்டில் பயணிகள் நடைபாதை, சைக்கிள்களுக்கு தனிப்பாதை என்றால் இரு பக்கமும் தலா 6 அடி தேவைப்படும். இதற்கு 12 அடி இடம் போனால் மீதி 8 அடி சாலையில்தான் பஸ்கள் செல்ல வேண்டும்.

டி.டி.கே சாலை மற்றும் சி.பி ராமசாமி சாலை சந்திப்பு மேம்பாலத்தில் டிடிகே சாலை மிக மிக குறுகலாக உள்ளது. தற்போது ஒரு பஸ் மட்டுமே செல்லும் நிலை உள்ளது. சி.பி ராமசாமி சாலையும் குறுகலாகவே உள்ளது. சர்தார்பட்டேல் சாலை, எல்.பி சாலைக்கான மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் சாலையும் அதே நிலையில்தான் உள்ளது. சர்தார் பட்டேல், காந்தி மண்டபம் சாலையில் காந்தி மண்டபம் செல்லும் சாலை மட்டும் சற்று அகலமாக உள்ளது. சர்தார் பட்டேல் சாலை குறுகலாக உள்ளது.

பீட்டர்ஸ் சாலை, கான்ரான்ஸ்மித் சாலையில், பீட்டர்ஸ் சாலை முழுக்க இரு சர்வீஸ் சாலைகளிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தவிர விபத்துகளில்  சிக்கும் வாகனங்களை மீட்கும் மீட்பு வாகனங்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. இப்பகுதியில் பிரபல கார் நிறுவனத்தின் ஷோரூம் இருப்பதால் எந்நேரமும் கார்கள் நின்று கொண்டிருக்கின்றன. மேலும் பீட்டர்ஸ் சாலை மிகவும் குறுகலாக உள்ளது.

மாநகராட்சியால் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட இந்த சாலைகளில் எதிலுமே பொதுமக்களுக்கான நடைபாதையோ அல்லது சைக்கிள் செல்ல தனிவழியோ ஏற்படுத்த இயலாது. சாலையை அகலப்படுத்தவும் வாய்ப்பில்லை. இரு பக்கமும் சாலையையொட்டி தனியார் இடங்கள் உள்ளன. சென்டர் மீடியனையும் எடுக்க முடியாது. இதனால் மாநகராட்சியின் இந்த திட்டத்தை நிறைவேற்ற இயலாது என்கின்றனர்.

No comments:

Post a Comment