Sunday, May 12, 2013

30 ஆண்டுகால புலி பயங்கிரவாதிகளின் யுத்தத்தின் பின்னர் வடமாகாணம் அடைந்துள்ள முன்னேற்றத்தை நேரில் வந்து பார்த்தால் வெளிநாட்டவர்கள் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்த தயங்குவார்கள்: எஸ்.பி. திவாரட்ன!

Sunday, May 12, 2013
இலங்கை::30 ஆண்டு கால யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சுமார் 3 இலட்சம் அப்பாவி மக்களுக்கு இலங்கை அரசாங்கம் புனர்வாழ்வு அளி
ப்பதிலும், மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் வாழ்வாதாரத்தை பெற்றுக் கொடுப்பதிலும் திருப்தியாக செயற்படவில்லை என்று உலக நாடுகளில் இலங்கைக்கு எதிராக அரச சார்பற்ற அமைப்புகளும், எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தை ஆதரிக்கும் புலம்பெயர்ந்த மக்களும் போலிப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.
 
இந்தப் போலிப் பிரசாரங்களை அடிப்படையாக வைத்து ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் அமெரிக்கா, இலங்கை மீது யுத்தக்குற்றச்சாட்டுகளையும் மனித உரிமை மீறல்களையும் மேற்கொண்டுள்ளது என்ற பிரேரணையும் நிறைவேற்றி இலங்கை அரசாங்கத்தின்மீது பாரிய அழுத்தங்களை கொண்டு வந்தது.
இவ்விதம் இலங்கை மீது மனித உரிமை மீறல், இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றாத நிலையில் வைத்திருத்தல் போன்ற குற்றச்சாட்டுகளை சர்வதேச ரீதியில் பலநாடுகளில் பேசக்கூடிய அளவுக்கு போலிப் பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்ற போதிலும் இலங்கையின் உண்மை நிலையை தெரிந்து கொள்ள ஒருவர் கூட விருப்பத்தையோ, ஆர்வத்தையோ காண்பிப்பதில்லை.
 
இந்தப் பின்னணியில் அரசாங்கம் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு இதுவரை செய்துள்ள பணிகளை ஆதாரபூர்வமாக எடுத்துரைப்பது எமது பொறுப்பு என்பதனால், அந்த உண்மைகளை இந்த சந்தர்ப்பத்தில் எடுத்துரைப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றோம்.
30 ஆண்டுகால யுத்தத்தின் பின்னர் புலிகள் தரப்பில் இருந்து இராணுவம் நிலைகொண்டிருந்த பகுதிக்கு தப்பிவந்த சுமார் 3 இலட்சம் பேர் வவுனியா மாவட்டத்தில் உள்ள மெனிக்பாமில் தற்காலிகமாக தங்க வைத்து அவர்களுக்கு பாதுகாப்பையும், உணவையும், இருப்பிட வசதியையும் அரசாங்கம் செய்து கொடுத்தது.
 
இதுபற்றி நாம் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் ஆலோசகரும் வடமாகாணத்திற்கான மீள்குடியேற்ற அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புக்கு பொறுப்பான செயலணியின் தலைவருமான திரு. எஸ்.பி. திவாரட்ன அவர்களை சந்தித்தோம். அவர் பிரதம ஆசிரியருக்கு அளித்த பிரத்தியேக பேட்டியை இங்கு தருகிறோம்.
 
கேள்வி:
 
இந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கு நீங்கள் இதுவரை செய்துவரும் செயற்றிட்டங்களை விளக்கிக் கூற முடியுமா?
 
திரு. எஸ்.பி. திவாரட்ன:
 
ஆம். மெனிக்பாமில் தங்கியிருந்த மக்களில் 95 சதவீதமானோர் அவர்களின் பூர்வீக வாசஸ்தலங்கள் இருந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளார்கள். இது இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட பணிகளில் சிறப்புமிக்க பணியாக அமைந்துள்ளது.
கேள்வி: மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு முதலில் சுத்தமான குடிநீர் அவசியம். இது தொடர்பாக நீங்கள் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்Zர்கள்?
 
திரு. எஸ்.பி. திவாரட்ன :
 
வடமாகாணத்தில் மாத்திரம் நாம் 35 ஆயிரம் குடிநீர் கிணறுகளை புனர்நிர்மாணம் செய்துள்ளோம். சில கிணறுகள் பழுதடைந்த நிலையில் இருந்தன. அவற்றையும் திருத்தியமைத்தோம். மீள் குடியேறிய மக்களுக்கு இந்த கிணறுகளில் இருந்து சுத்தமான நீரை பெற்றுக் கொள்ள முடியும். தூய்மையான நீர் இல்லாத பிரதேசங்களுக்கு அரசாங்கம் பெளசர்கள் மூலம் சுத்தமான குடிநீரை நாளாந்தம் விநியோகித்து வருகின்றது.
நாம் இதனுடன் நின்றுவிடாமல் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு சுத்தமான கழிவறை வசதிகளையும் செய்து கொடுத்து அவர்கள் வாழும் பிரதேசத்தில் சுகாதார வசதிகளையும், அதிகரித்து மக்களை நிம்மதியாக வாழ வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
 
கேள்வி:
 
30 ஆண்டு கால யுத்தத்தினாலும் சுனாமி அனர்த்தத்தினாலும் சேதமடைந்தும், தரைமட்டமாகியுள்ள பாடசாலை கட்டிடங்களை நீங்கள் எந்த அடிப்படையில் திருத்தியமைத்தீர்கள்?
திரு. எஸ்.பி. திவாரட்ன :
 
வடமாகாணத்தில் எல்லாமாக 1,026 பாடசாலைகள் இருக்கின்றன. இவற்றில் 650 பாடசாலைகளின் கூரைகள் தகர்ந்துள்ளன. எனவே, யுத்தம் முடிவடைந்து மூன்றரை வருடங்களுக்குள் நாம் பெரும்பான்மையான பாடசாலைகளை புனரமைத்தும் அங்கு பிள்ளைகளுக்கு கல்வி புகட்டுவதற்கான வசதிகளை பெருக்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன்படி தற்போது 989 பாடசாலைகள் சிறந்த முறையில் வடமாகாணத்தில் இயங்குகின்றன. வடமாகாணத்தில் எல்லாமாக 2 லட்சத்து 60 ஆயிரத்து 582 பாடசாலை பிள்ளைகள் கல்வி கற்கிறார்கள். அவர்களுக்கு எல்லாமாக 13 ஆயிரத்து 967 ஆசிரியர்கள் கல்வி கற்றுக் கொடுக்கிறார்கள். இவ்விதம் சேதமடைந்த பாடசாலைகளை புனர்நிர்மாணம் செய்வதற்கு அரசாங்கம் 1.3 பில்லியன் ரூபாவை செலவு செய்து வருகிறது.
கேள்வி : வடமாகாணத்தில் பலதரப்பட்ட அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றைப்பற்றி சற்று விளக்கிக் கூற முடியுமா?
 
திரு. எஸ்.பி. திவாரட்ன :
 
வடமாகாணத்தில் இயற்கை அனர்த்தங்களும் மனிதனால் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் சுயநல நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட அனர்த்தங்களும் பெருமளவில் அமைந்திருந்தன. இது அரசாங்கத்துக்கு ஒரு பெரும் சவாலாக அமைந்தது.
நான் அனர்த்த முகாமைத்துவ பேரவையின் தலைவராக இருந்தமையால் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டவுடன் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையுடன் உடனடியாக மீட்புப் பணிகளை ஆரம்பித்து அந்த மக்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக் கொடுத்தேன்.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போது இன்றைய ஜனாதிபதி பிரதம மந்திரியாகவே இருந்தார். அப்போது அவர் அன்றைய ஜனாதிபதி நாட்டில் இல்லாத காரணத்தினால் அரசாங்கப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சிறந்த முறையில் நிவாரணப் பணியை துரிதப்படுத்தினார்.
 
கேள்வி:
 
நன்றி. திரு. திவாரட்ன அவர்களே. அன்று நீங்கள் எந்த அடிப்படையில் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டீர்கள்?
திரு. எஸ்.பி. திவாரட்ன : நாம் மக்களை மீள்குடியேற்றும் செயற்பாட்டினை 2009ம் ஆண்டில் மிகவும் அவதானமாக ஆரம்பித்தோம். நாம் திட்டமிட்டே ஒவ்வொரு நடவடிக்கையையும் மேற்கொண்டோமே ஒழிய அவசரப்பட்டு எதனையும் செய்யவில்லை. நாம் திட்டமிட்டு நிதானமாக இப்பணியை மேற்கொண்டமையால் தான் இன்று சர்வதேசம் பாராட்டக்கூடிய வகையில் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த ஊர்களில் குடியமர்த்தும் சாதனையை ஏற்படுத்த முடிந்தது.
கேள்வி: சரி. எந்த அடிப்படையில் இதனை செய்தீர்கள்?
 
திரு. எஸ்.பி. திவாரட்ன :
 
நான்கு அம்ச திட்டத்தின் கீழ் இதனை நாம் செய்தோம். முதலாவதாக, அவர்களே தங்கள் விருப்பத்தின் பேரில் மீள்குடியேற விரும்பிய இடங்களில் குடியமர்த்தினோம். அடுத்தபடியாக இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களிலேயே குடியமர்த்துவதற்கு நாம் அரும்பாடு பட்டு அதனை செய்து முடித்தோம். மூன்றாவதாக இந்த மீள்குடியேற்றம் மரியாதையாகவும், குடியேறுபவர்களுக்கு பாதுகாப்பாகவும் அமைய வேண்டும். நான்காவது அம்சமாக இலங்கை இராணுவம் இந்த மீள்குடியேறிய மக்களுக்கு எங்களுடன் பங்குதாரர்களாக இணைந்து உதவி செய்ய வேண்டுமென்பதாக இருந்தது.
கேள்வி : இதுவரை நீங்கள் சாதித்த மீள்குடியேற்ற செயற்பாடுகளை எடுத்து சொல்லுங்கள்.
 
திரு. எஸ்.பி. திவாரட்ன :
 
 நாம் ஏறத்தாழ ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 320 குடும்பங்களை மீள்குடியேற்றி இருக்கிறோம். மெனிக்பாமில் உள்ளவர்கள் மட்டுமல்ல அதற்கு வெளியில் நண்பர்கள், உறவினர்களுடன் இருந்தவர்களும் இதில் அடங்குவர். இதனடிப்படையில் 4 இலட்சத்து 98 ஆயிரத்து 838 பேர் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.
கேள்வி: மீள்குடியேற்றத் திட்டம் முற்றுப் பெற்றுவிட்டதா?
திரு. எஸ்.பி. திவாரட்ன : யாழ்ப்பாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் உள்ள சில குடும்பங்களைத் தவிர மற்ற இடங்களில் அனைவரும் மீள்குடியேற்றப்பட்டுள்ளார்கள். யாழ்ப்பாணத்தில் 7 ஆயிரத்து 830 குடும்பங்களின் காணிகள் அரசாங்க செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படு கின்ற காரணத்தினால் அரசாங்கம் இக்காணிகளை விடுவிக்கும் வரை இவர்களை மீள்குடியேற்ற முடியாதிருக்கிறது. இந்தக் காணிகளை அரசாங்கம் விடுவிக்க முடியாது இருந்தால் அதற்கான நஷ்டஈடு இவர்களுக்கு கொடுக்கப்படும்.
கேள்வி: அடுத்தபடியாக, சுகாதார சேவையைப் பற்றி சில தகவல்களை தாருங்கள்?
 
திரு. எஸ்.பி. திவாரட்ன :
 
30 ஆண்டுகால யுத்தத்தின் போது கிளிநொச்சி மாவட்டமே அதிகம் பாதிப்புக்குள்ளானது. அங்கு தரைமட்டமாக்கப்பட்ட ஆஸ்பத்திரிகளை நாம் புதிய கட்டிடங்களாக நிர்மாணித்துள்ளோம். 2009 மற்றும் 2011ம் ஆண்டுகளில் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக 2135 மில்லியன் ரூபா செலவாகியது. இவற்றைவிட தற்போது அமுலில் உள்ள திட்டங்களை பூர்த்தி செய்வதற்காக 9 ஆயிரத்து 254 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
 
கேள்வி:
 
தற்போது வடபகுதியில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான விகிதாசாரம் எப்படி அமைந்துள்ளது?
திரு. எஸ்.பி. திவாரட்ன : யதார்த்தபூர்வமாக அமைந்துள்ளது. 2009ம் ஆண்டு முதல் நாம் 1,630 பாடசாலைக் கட்டிடங்கள் 1,341 மில்லியன் ரூபா செலவில் திருத்தியமைக்கப்பட்டன. வடபகுதியில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான விகிதாசாரம் தேசிய விகிதாசாரத்தைப் போன்று அதே அளவில் அமைந்திருப்பது நாம் மகிழ்ச்சியடைய வேண்டிய விடயமாகும்.
 
கேள்வி:
 
சுகாதாரத்துறையில் குறிப்பாக தொற்றுநோய் பரவுவதை எந்தளவுக்கு நீங்கள் தடுக்கக்கூடியதாக இருந்தது?
திரு. எஸ்.பி. திவாரட்ன :
 
 ஒரு வயதிற்கும் இரண்டு வயதிற்கும் இடைப்பட்ட பிள்ளைகளின் போஷாக்கின்மை குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருக்கிறது. மற்ற மாகாணங்களை விட வட மாகாணத்தில் 2010 முதல் 2012 வரையில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
கேள்வி: வீடமைப்புத்துறையில் நீங்கள் அடைந்துள்ள முன்னேற்றம் என்ன?
திரு. எஸ்.பி. திவாரட்ன : வடபகுதியில் எல்லாமாக 78 ஆயிரம் நிரந்தர வீடுகளின் நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது வரையில் 27 ஆயிரத்து 983 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
கேள்வி: வீதி மற்றும் ரயில் பாதைகளில் புனரமைப்பு பற்றி தகவல்களை தாருங்கள்?
 
திரு. எஸ்.பி. திவாரட்ன :
 
அரசாங்கம் வடபகுதியில் மட்டுமல்ல நாடெங்கிலும் பாதை இணைப்பு பணிகளுக்காக பெருமளவு பணத்தை முதலீடு செய்துள்ளது. சகல பிரதான நெடுஞ்சாலைகளும் புனரமைக்கப்பட்டுள்ளன. பிரதான பாதைகள், மாகாண சபையின் பாதைகள் மற்றும் கிராமிய பாதைகள் அனைத்துமே திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இதற்கென அரசாங்கம் 7 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளது. வடமாகாணத்தில் மாத்திரம் 2009ம் ஆண்டில் 47 ஆயிரத்து 31 புதிய வாகனங்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை 2011ல் 62 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளன. ரயில் பாதையை காங்கேசன் துறை வரை புனர்நிர்மாணம் செய்வதற்கு 652 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. ஓமந்தை ரயில் நிலையத்தில் இருந்து மடுவுக்கான ரயில் சேவை மே மாதம் 17ம் திகதி ஆரம்பிக்கப்படும்.
கேள்வி: விவசாயத்துறையில் நீங்கள் அடைந்துள்ள சாதனைகளை குறிப்பிட முடியுமா?
 
திரு. எஸ்.பி. திவாரட்ன :
 
விவசாயத்துறையே மக்களுக்கு அடிப்படை உணவுப்பாதுகாப்பு அளிக்கும் ஒரு துறையாகும். விவசாயத்துறையில் 80 சதவீதமான மக்கள் தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளார்கள்.
அத்துடன் இந்த மூன்றாண்டு காலத்தில் நாம் வடபகுதியின் நீர்ப்பாசன வலையமைப்பை சிறந்த முறையில் திருத்தியமைத்துள்ளோம்.
பயன்படுத்தப்படாத நெற்காணிகளை உழுது, அங்கு விவசாயத்தை ஆரம்பித்துள்ளோம். விவசாயத்துக்கு தேவையான இயந்திர உபகரணங்களை விவசாயிகளுக்கு சலுகை அடிப்படையில் வங்கிக் கடன்கள் பெற்றுக் கொடுத்துள்ளோம். தற்போது வடபகுதியில் ஒரு இலட்சத்து 93 ஆயிரத்து 200 ஏக்கர் காணியில் விவசாயம் செய்கை பண்ணப்படுகிறது. இதன் மூலம் அங்கு இரண்டு இலட்சத்து 12ஆயிரத்து 722 மெற்றிக் தொன் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது.
 
கேள்வி:
 
நீர்த்தேக்கங்களை நீங்கள் எவ்விதம் திருத்தியமைத்துள்Zர்கள்?
திரு. எஸ்.பி. திவாரட்ன :
 
நாம் சிறிய, நடுத்தர அளவிலான 200 குளங்களை திருத்தியமைத்துள்ளோம். இவற்றின் மூலம் ஒரு இலட்சத்து 89ஆயிரம் ஏக்கர் நெற்காணிக்கு நீர்ப்பாசனம் வழங்கப்படுகிறது. இதற்கென நாம் 6ஆயிரத்து 334 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளோம்.
கேள்வி: வடபகுதியின் மீன்பிடித்துறை எவ்விதம் முன்னேற்றமடைந்துள்ளது?
திரு. எஸ்.பி. திவாரட்ன :
 
நாம் மீனவர்களுக்கு தேவையான படகுகள், இயந்திரங்கள், வலைகள் போன்ற பொருட்களை இலகு கடன் அடிப்படையில் பெற்றுக் கொடுத்துள்ளோம். நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் 11 சதவீதம் தற்போது வடபகுதியில் பெறப்படுகிறது. தற்போது வடமாகாணத்தில் மீன் உற்பத்தி அதிகரித்துள்ளது. 2009ல் 21ஆயிரத்து 880 மெற்றிக் தொன் மீன் பிடிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை 2011ல் 48ஆயிரத்து 520மெற்றிக் தொன்னாக அதிகரித்தது.
 
வடபகுதியில் கடலிலும் நன்னீரிலும் எல்லாமாக 50 ஆயிரம் மீனவர்கள் நாளாந்தம் உழைக்கிறார்கள். வடபகுதியில் இருந்து கொழும்புக்கு 28 குளிரூட்டப்பட்ட லொறிகளில் மீன் அனுப்பி வைக்கப்படுகிறது. 2008ம் ஆண்டில் வடபகுதியில் மீன் உற்பத்தி பூஜ்ஜிய நிலையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. அதுபோன்று கால்நடை உற்பத்தியும் கோழிப்பண்ணையும் வடபகுதியில் இப்போது சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.இவ்விதம் இன்று வடமாகாணம் பொருளாதாரத்துறையில் மறுமலர்ச்சி அடைந்துள்ளது.
மக்களும் மன நிம்மதியுடன் மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இலங்கை பற்றி விமர்சிக்கும் வெளிநாட்டவர் இங்கு வந்து உண்மை நிலையை கண்டறிந்தால் நிச்சயம் அவர்கள் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தின் மீது இவ்விதம் அநாவசியமான அழுத்தங்களை கொண்டுவருவதை தவிர்த்து கொள்வார்கள்.

No comments:

Post a Comment