Tuesday, May 07, 2013
இலங்கை::புலிகள் இயக்கத்தினரால் கடந்த 1998 ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயார் ‘அன்டனோ-24’ என்ற விமானத்தின் உதிரிப்பாகங்களை தேடும் பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை இரணைதீவு கடற்பரப்பில் ஆரம்பிக்கப்பட்டன. இத் தேடும் நடவடிக்கையில் கடற்படையின் ரணகஜ, எல்-820 என்ற இரண்டு கப்பல்களும் 3 கடற்படை சுழியோடி அதிகாரிகளும் 22 சுழியோடிகளும் ஈடுபட்டனர்.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட இத் தேடுதல் நடவடிக்கையின் மூலம் இரணைதீவு தெற்கே ஒன்றரை கடல் மைல் பகுதியில் சுமார் 25 அடி ஆழத்திலிருந்து விமான உதிரிப்பாகங்கள் மீட்டெடுக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயனாத் கொம்பகேவின் வழிகாட்டலில் வடமேற்குக் கடற் பிராந்திய கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிசிர ஜயகொடியின் ஆலோசனைக்கமைய கெப்டன் ஜயந்த கமகே தலைமையில் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதேவேளை, பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதல் பணியின் போது அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் எலும்புகள், உடுதுணி ஒரு பகுதி, சப்பாத்துக்கள் மற்றும் செருப்புக்கள் ஏனைய பொருட்களும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
1998 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29ம் திகதி 48 பயணிகளுடனும் 8 விமான சிப்பந்திகளுடனும் பலாலியில் இருந்து ரத்மலானை நோக்கி பயணித்த லயன் எயார் விமானம் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








No comments:
Post a Comment