Thursday, May 2, 2013

டோல்கேட்டில் துப்பாக்கியை காட்டி மிரட்டல் தேமுதிக நிர்வாகி கைது 14 தோட்டாக்கள் பறிமுதல்!

Thursday, May 02, 2013
சென்னை::டோல்கேட்டில் துப்பாக்கியை காட்டி ஊழியரை மிரட்டிய தேமுதிக நிர்வாகி கைது செய்யப்பட்டார். நாங்குநேரி அருகே நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்தவர் கோதை மாரியப்பன் (61). தொழிலதிபரான இவர் தேமுதிக மேற்கு மாவட்ட அவைத் தலைவராக இருக்கிறார். நேற்று இவரும், சிவகுருநாதபுரத்தைச் சேர்ந்த வெற்றிவேல் (39) என்பவரும் வள்ளியூரில் நடந்த தேமுதிக மே தின பொதுக்கூட்டத்துக்கு சென்று விட்டு இரவில் காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

சுரண்டையைச் சேர்ந்த அந்தோணிசாமி (23) என்பவர் காரை ஓட்டினார். நாங்குநேரி டோல்கேட்டில் வந்தபோது அங்கிருந்த ஊழியர் முத்தையா, கட்டணம் கேட்டார். அவரிடம் மாரியப்பன், ‘நாங்கள் தேமுதிகவில் முக்கிய பொறுப்பில் உள்ளோம். கட்டணம் தர முடியாது‘ என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. முத்தையாவுக்கு ஆதரவாக மற்ற ஊழியர்கள் திரண்டனர்.

ஆத்திரமடைந்த மாரியப்பன் தன்னிடமிருந்த துப்பாக்கியை காட்டி ஊழியர்களை சுட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நாங்குநேரி டிஎஸ்பி கோவிந்தராஜ், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கனகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து கோதை மாரியப்பனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த துப்பாக்கி, 14 தோட்டாக்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. கார் டிரைவர் அந்தோணிசாமி, வெற்றிவேல் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
 

No comments:

Post a Comment