Tuesday, April 02, 2013
ராமேஸ்வரம்::இலங்கை கடற்படை கைது சம்பவ எதிரொலியால், மீனவர்கள் இந்திய எல்லை தாண்டி, மீன் பிடிக்க செல்ல வேண்டாம்' என, ராமேஸ்வரம் மீன் துறையினர் எச்சரித்துள்ளனர்.
மார்ச், 13ம் தேதி, இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்கள், 19 பேரை கைது செய்து, 19 நாட்களாக வவுனியா சிறையில் அடைத்துள்ளனர். மீனவர்களை விடுதலை செய்ய கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம், ரயில் மறியல் போராட்டம் நடத்தியும், மத்திய அரசு, மீனவர்களை விடுவிக்க முயற்சி செய்யவில்லை. இலங்கை அரசும் பிடிவாதமாக உள்ளதால், மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏப்., 15ம் தேதி, மீன்பிடிக்க தடைகாலம் துவங்க உள்ளதால், எஞ்சியுள்ள நாட்களில், இலங்கை கடற்படையிடம் சிக்காமல், மீன் பிடிக்க செல்லலாம் என, முடிவெடுத்தனர்.
நேற்று, 634 படகுகளுக்கு, மீன்பிடிக்க அனுமதி டோக்கனை, மீனவர்கள் பெற்றனர். டோக்கன் வழங்கிய மீன்துறை அதிகாரிகள், "இந்திய எல்லை தாண்டி, மீன் பிடிக்க செல்ல வேண்டாம்; நிர்ணயிக்கப்பட்ட மீனவர்கள் தவிர, படகில் கூடுதலாக செல்லக் கூடாது' என, எச்சரித்தனர். எல்லை தாண்டினால், இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைத்து விடலாம். விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காது என்ற பீதியில், வெளியூர் சென்ற பெரும்பாலான கூலி தொழிலாளர்கள், மீன்பிடிக்க செல்ல, ராமேஸ்வரம் வரவில்லை. இதனால், 634 படகுகளுக்கு மீன் பிடிக்க அனுமதியளித்தும், 400க்கும் குறைவான படகுகளே, மீன்பிடிக்க சென்றது.
No comments:
Post a Comment