Thursday, April 4, 2013

டெசோ குறித்து அ.தி.மு.க. - தி.மு.க. விவாதம்!!

Thursday, April 04, 2013
சென்னை::சட்டப்பேரவையில் நேற்று டெசோ குறித்த விவாதம் தி.மு.க.- அ.தி.மு.க.வினரிடையே கடுமையாக நடைபெற்றது. இறுதியாக தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.  சட்டப்பேரவையில் நேற்று சமூகநலம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மானிய விவாதத்தில் அமைச்சர் பா.வளர்மதி பதிலுரையாற்றியபோது தி.மு.க.- அ.தி.மு.க.வினரிடையே கடுமையான விவாதம் நடைபெற்றது. 
 
அதன் விவரம் வருமாறு:-
 
அமைச்சர் பா.வளர்மதி: இலங்கையில் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்ததை கண்டித்து இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும், அங்கே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். ஆனால் சிலர் டெசோ என்ற பெயரில் இங்கிருந்து 40 பேரை கூட்டிக்கொண்டும், ரோட்டில் திரிந்த 5 பேரை சேர்த்துக் கொண்டும், ஆளே அமர முடியாத அரங்கில் 50 பேரை மட்டும் வைத்துக்கொண்டு டெல்லியில் கருத்தரங்கை நடத்தினார்கள். இலங்கைக்கு சாதகமான பிரதிநிதிகளை அழைத்து வந்து அந்த கருத்தரங்கில் கலந்துகொள்ள வைத்துள்ளனர். அதற்கு ராஜபக்சேவையே கலந்து கொள்ள வைத்திருக்கலாம்.   
 
மு.க.ஸ்டாலின் (தி.மு.க.): சமூகநலன் குறித்த பதிலுரையில் டெசோ எங்கிருந்து வந்தது? எனவே அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். 
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: டெசோ என்பது எப்போது உருவாக்கப்பட்டது? 2009-ல் இலங்கையில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டபோது டெசோ அமைப்பு எங்கே போயிருந்தது? நீங்கள் ஆட்சியில் இருந்தபோது ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டு, வலுவில்லாதபோது டெசோ உருவாக்கி உள்ளனர். அதைத்தான் அமைச்சர் குறிப்பிடுகிறார். 
ஸ்டாலின் (தி.மு.க.): 2009-ல் தி.மு.க. என்ன செய்தது என்பது எல்லோருக்கும் தெரியும்...
(இவ்வாறு ஸ்டாலின் பேசிக்கொண்டு இருந்தபோது, சக்கரபாணி, டி.ஆர்.பி.ராஜா, ஏ.வ.வேலு உள்பட தி.மு.க. உறுப்பினர்கள் ஸ்டாலினுக்கு மைக் கொடுக்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர்)
சபாநாயகர்: தி.மு.க.வினர் அடிக்கடி பேரவைத் தலைவர் மேஜைக்கு அருகில் வந்து பணி செய்ய விடாமல் செய்கிறீர்கள். உங்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும். 
 
மீண்டும் தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் ஸ்டாலின், எங்களுக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை. எனவே நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறியதையடுத்து தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.

No comments:

Post a Comment