Thursday, April 25, 2013

அமைச்சர் ஹக்கீம்-வியட்நாம் பிரதமர் நகுயென் டான் டுங் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு: அமைச்சர் ஹக்கீமும், வியட்நாமிய பௌத்த பிக்குவும் சந்திப்பு!

Thursday, April 25, 2013
இலங்கை::ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட மனிதஉரிமை மீறல் சம்பந்தமான தீர்மானங்கள், இலங்கையை ஐ.நா. பொதுச் சபையிலும், பாதுகாப்புச் சபையிலும் சிக்கலுக்கும், இக்கட்டான நிலைமைக்கும் உள்ளாக்கும் நோக்கத்திலேயே கொண்டுவரப்பட்டதாக நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அமைச்சர் ஹக்கீம்-வியட்நாம் பிரதமர் நகுயென் டான் டுங் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு பிரதமரின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
 
யுத்தம் முடிவடைந்துள்ள சூழ்நிலையில் இலங்கை அடைந்து வரும் துரித முன்னேற்றம் குறித்து கருத்துத் தெரிவித்த வியட்நாம் பிரதமர் போருக்குப் பின் அமைதியையும், சமாதானத்தையும் நோக்கி இலங்கை நகர்வதையிட்டு மகிழ்ச்சி வெளியிட்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஹக்கீம், நாட்டின் இறைமையையும், தன்னாதிக்கத்தையும், ஒருமைப்பாட்டையும் தக்கவைத்துக் கொண்டு இலங்கை நீண்டகால அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகக் கூறினார். வியட்நாமும் தனது முழு எல்லைப் புறங்களையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு நாட்டை ஒற்றுமைப் படுத்தியிருப்பதையிட்டும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

தாமும், வியட்நாம் நீதியமைச்சரும் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை வெற்றிகரமாக செயல்படுத்துவதன் ஊடாக இரு நாடுகளுக்களுக்குமிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தக்கூடியதாக இருக்குமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
 
அத்துடன் இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தக, பொருளாதார முதலீடுகளை மேற்கொள்வதற்கான வழிவகைகளை கண்டறிந்து, அவற்றை சிறப்பாக கையாள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதையும் அமைச்சர் ஹக்கீம் பிரதமரிடம் சுட்டிக்காட்டினார்.
 
ஜெனீவாவில் இலங்கை முகம்கொடுக்க நேர்ந்த மனித உரிமை மீறல் பிரச்சினைத் தீர்மானங்கள் பற்றிக் குறிப்பிட்ட அமைச்சர் ஹக்கீம், அத்தீர்மானங்கள் இலங்கையை ஐ.நா. பொதுச் சபையிலும், பாதுகாப்புச் சபையிலும் சிக்கலுக்கும், இக்கட்டான நிலைமைக்கும் உள்ளாக்கும் நோக்கத்திலேயே கொண்டுவரப்பட்டதாகவும் கூறினார்.
இலங்கைக்கு கல்வி, கலாசாரம், விஞ்ஞானம், தொழிநுட்பம் ஆகிய துறைகளில் வியட்நாம் அரசு பெரிதும் ஒத்துழைக்கும் என்று பிரதமர் நகுயென் டான் டுங் உறுதியளித்தார்.
வியட்நாம் மக்கள் உயர்நீதிமன்றத்தின் பதில் நீதியரசரும்;, அங்குள்ள சட்டமன்றத்தின் தலைவரும் அமைச்சர் ஹக்கீமைச் சந்தித்து கலந்துரையாடினர்.
 
அமைச்சர் ஹக்கீம் ஹனோயிலுள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஹோ ஷி மினின் நினைவுத்தூபிக்கும் மரியாதை செலுத்தினார்.
தமது ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் அமைச்சர் ஹக்கீம் இன்று வியாழக்கிழமை அதிகாலை நாடு திரும்பினார்...
 
அமைச்சர் ஹக்கீமும், வியட்நாமிய பௌத்த பிக்குவும் சந்திப்பு!
 
தற்பொழுது வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், அங்கு வின்ஹ் புங் பிராந்தியத்தில் உள்ள பௌத்த மடாலயத்தில் அதன் பிரதம பிக்கு டிச் கெயின் நகுயெட் தேரரை சந்தித்து உரையாடினார்.
 
பிரதம பிக்கு வியட்நாமின் பௌத்தத்தின் வரலாறு பற்றிக் கூறினார். இந்தியாவின் அசோகச் சக்கரவர்த்தி, இலங்கைக்கு தமது புதல்வர் அரஹத் மஹிந்த ஊடாக பௌத்த சாசனத்தை அறிமுகப்படுத்திய அதே காலகட்டத்தில் ஒரு பௌத்த தூதுக்குழுவை வியட்நாமுக்கும் அனுப்பி வைத்ததாக அவர் கூறினார்.
 
வரலாற்று ஆதாரங்களின் படி, குலபாஉர் ராஷிதீன்களில் மூன்றாமவரான உதுமான் இப்னு அப்வான் (ரலி) கலீபாவாக பதவி வகித்த காலத்தில், முஸ்லிம் தூதுவர் ஒருவரை வியட்நாமுக்கு அனுப்பி வைத்ததாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
 
வியட்நாமின் சில பிராந்தியங்களில் முஸ்லிம்களும் கணிசமான எண்ணிக்கையில் வசிப்பதோடு, அழகிய பள்ளிவாசல்களும் அங்கு அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.
 
பிரதம பிக்கு டிச் கெயின் நகுயெட் தேரர் அமைச்சர் ஹக்கீமுக்கு நினைவுச் சின்னமொன்றையும் அன்பளிப்புச் செய்தார்.

No comments:

Post a Comment