Friday, April 5, 2013

மீனவர்களுக்கு 75% மானிய விலையில் வி.எச்.எஃப் ரேடியோ கருவிகள்: முதல்வர் ஜெயலலிதா!

Friday, April 05, 2013
சென்னை::மீனவர்களின் வருவாயைப் பெருக்க சில திட்டங்களை அறிவித்த முதல்வர்
ஜெயலலிதா, மீன்வர்களுக்கு மிகவும் பயன்படும் வி.எச்.எஃப் ரேடியோ கருவிகளை 75% மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.
 
இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அவர் அளித்த அறிக்கையில்,
வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், புரதச் சத்துள்ள உணவைப் பெருக்குவதிலும், கணிசமான அந்நிய செலாவணியை ஈட்டுவதிலும் மீன்பிடித் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றாலும் இந்தத் தொழிலை மேற்கொண்டு வரும் தமிழக மீனவர்கள் பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. மீனவர்களின் துயரினை உணர்ந்த அரசு, மீன்பிடி தடைக் காலங்களில் வழங்கப்பட்டு வரும் தொகையை இரட்டிப்பாக்கியது, மீன்பிடிப்பு குறைந்த காலங்களில் சிறப்பு நிவாரண உதவித் தொகையாக 4,000 ரூபாய் வழங்கும் முன்னோடித் திட்டம்; விற்பனை வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் வழங்கும் திட்டம், விற்பனை வரி விலக்கு அளிக்கப்பட்ட மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.
 
தமிழ்நாட்டில் தற்போது 5,600 மீன்பிடி விசைப் படகுகள் உள்ளன. சில மீனவர்கள் தங்கள் படகுகளில் தகவல் தொடர்பு சாதனங்களை பொருத்தியுள்ளனர். இன்னும் பெரும்பாலான விசைப் படகுகளில் தகவல் தொடர்பு சாதனங்கள் ஏதுமில்லை. மீனவர்களின் பாதுகாப்பிற்கு உயர் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத விசைப் படகுகளுக்கு மானிய விலையில் VHF ரேடியோ கருவிகள் வழங்கப்படும்; கடலோரப் பகுதிகளில் உயர் கோபுரங்களை அமைத்து மீனவர்கள் எளிதில் தொடர்பு கொள்ளத் தேவையான தகவல் தொடர்பு உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.
 
20,000 ரூபாய் விலையுள்ள இந்த VHF கருவிகளுக்கு 75 விழுக்காடு மானியம் வழங்கப்படும். இந்த கம்பியில்லா தகவல் தொடர்பு வசதிகள் மூலம் இடர் நேரிடும் காலங்களில் கரையில் இருக்கும் அரசு அலுவலர்களையும், குடும்பத்தினரையும் தொடர்பு கொள்ள இயலும். 
இதே போன்று, புயல் மற்றும் வெள்ளக் காலங்களில் எச்சரிக்கைத் தகவல்களை அரசு அலுவலர்கள் மீனவர்களுக்கு கொண்டு செல்ல இயலும்.  மேலும், ஐதராபாத்தில் உள்ள கடல் தகவல் பணிக்கான இந்திய தேசிய மையத்திலிருந்து பெறப்படும் தகவல்களை தாமதமின்றி மீனவர்களுக்கு உடனடியாக அனுப்பிடவும் இந்தத் தகவல் தொடர்பு வசதி பயன்படும். இதனால் மீனவர்கள் துல்லியமாக மீன்கள் நிறைந்த பகுதிக்குச் சென்று மீன் பிடிக்க இயலும்.
 
தொலைதூரத்தில் ஆழ் கடல் பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கி மீன்பிடி தொழிலை மேற்கொள்ளும் படகுகளுக்கு அதிக அலைவரிசைக் கொண்ட ரேடியோ கருவி வசதிகள் தேவைப்படுவதால், அதிக விலை கொண்ட இந்த ரேடியோ கருவிகள் தேவைப்படும் மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும். 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த HF கருவிகளுக்கு 75 விழுக்காடு மானியம் வழங்கப்படும். இதற்கான கட்டுப்பாட்டு அறைகளை நிர்வகிக்கும் பொறுப்பினையும் மீன் வளத் துறை ஏற்கும். 8 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
- என்று முதல்வர் அறிவித்தார்.

No comments:

Post a Comment