Monday, April 29, 2013

ஆத்தூர் அருகே அதிகாலை துணிகரம் ஏடிஎம் மெஷினை கடத்தி கொள்ளை முயற்சி சென்னை வாலிபர்கள் உள்பட 5 பேர் கைது பயங்கர ஆயுதங்கள், மினி வேன் பறிமுதல்!

Monday, April 29, 2013
சென்னை::ஆத்தூர் அருகே இன்று அதிகாலை ஏடிஎம் மெஷினை உடைத்து கடத்த முயன்ற சென்னை வாலிபர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுகொட்டாய் கிராமத்தையொட்டி சேலம் & சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஏடிஎம் மையம் உள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு எஸ்ஐ சம்பத் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஏடிஎம் அருகே சந்தேகப்படும் வகையில் மினி வேனுடன் நின்று கொண்டிருந்த 3 வாலிபர்கள், போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

அப்போது ஏடிஎம் மையத்தில் இருந்து 2 பேர் வெளியே வந்தனர். அவர்களையும் போலீசார் பிடித்தனர். பின்னர் ஏடிஎம் மையத்துக்குள் சென்று பார்த்தபோது வயர்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருந்தன. அதனால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
மினி வேனை சோதனை செய்தபோது அரிவாள், கோடாரி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது. ஆயுதங்களையும், மினிவேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 5 பேரையும் கைது செய்து தலைவாசல் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அவர்கள் சென்னை ஆவடியை சேர்ந்த காளியப்பன் (25), பாரதிராஜா (24), கோவர்தன் (26), தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த முருகன் (27), சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த நைனார்பாளையத்தை சேர்ந்த பிபிஏ பட்டதாரி சரவணன் (21) என்பதும், ஏடிஎம் மெஷினை மினி வேனில் கடத்திச் சென்று பாதுகாப்பான இடத்தில் வைத்து உடைத்து பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போட்டதும் தெரியவந்தது.

இதுபற்றி தகவலறிந்ததும் எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ், தலைவாசல் சென்று விசாரணை நடத்தினார். சில நாட்களுக்கு முன்பு ஆத்தூர் அருகே வீரகனூரில் ஏடிஎம் காவலாளியை கொன்று கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் ஒரு கொள்ளை முயற்சி ஆத்தூர் வட்டாரத்தில் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தற்போது பிடிபட்டவர்களுக்கு வீரகனூர் சம்பவத்தில் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment