Thursday, March 21, 2013
ஜெனிவா::இலங்கை தொடர்பான அமெரிக்க தீர்மானம் தொடர்பாக வாக்கெடுப்புகள் இன்று இடம்பெறவுள்ளன.
இலங்கையின் பொறுப்பு கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை மேம்படுத்தல் எந்த தொனிப்பொருளில் பிரேரணையொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த தீர்மானத்தில் மேலும் வலியுறுத்தல் விடுக்கும் வகையில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்று சில நாடுகள் தெரிவித்திருந்தன.
அது தொடர்பில் அனைத்து நாடுகளும் தமது நிலைப்பாடுகளை வெளியிட்டிருந்தன,
தீர்மானத்தை தோற்கடிக்க இலங்கை அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மாநாடு கடந்த மாதம் 22ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இலங்கையில் தமிழர் மறுவாழ்வு பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும், போர் குற்றங்கள் குறித்து நியாயமான விசாரணை நடைபெறவில்லை என்றும் கூறி, அமெரிக்கா 2ஆவது தீர்மானத்தை கொண்டு வருவதாக அறிவித்தது.
இந்த 2ஆவது தீர்மானத்தின் வரைவு அறிக்கையை அமெரிக்கா, கடந்த 12ஆம் திகதி தாக்கல் செய்தது. அதில், இலங்கையின் போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டது. சில கடுமையான வாசகங்களும் இடம்பெற்றன.
இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் இறுதி தீர்மானம் கடந்த 18ஆம் திகதி, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டது.
வரைவு தீர்மானத்தில் இடம்பெற்ற கடுமையான வாசகங்கள் நீக்கப்பட்டு, தீர்மானமே நீர்த்து போயிருந்தது. போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக, இலங்கை அரசே சர்வதேச மனித உரிமைகள் சட்ட மீறல்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான விசாரணை நடத்த வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டுமென தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மனித உரிமை ஆர்வலர்களும் இதற்காக தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
இந்த சூழ்நிலையில், ஐ.நா. மனித உரிமை பேரவையில் இன்று காலை 10 மணிக்கு (இலங்கை நேரம் பிற்பகல் 2.35) அமெரிக்க தீர்மானம் முறைப்படி தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தப்படுகிறது. தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்து பேசுவார்கள். விவாதத்தின் முடிவில் தேவைப்பட்டால், வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இலங்கையே வாக்கெடுப்பு நடத்தி தீர்மானத்தை தோற்கடிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறது. எனவே, வாக்கெடுப்பு நடத்தும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
47 உறுப்பு நாடுகளை கொண்ட பேரவையில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக உள்ளன. ஆதரவை பெருக்கி தீர்மானத்தை தோல்வியடையச் செய்ய இலங்கை தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
எனினும், கடந்த முறை போல் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்க தீர்மானம் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment