Thursday, March 21, 2013

மு.க.,ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு ; மகன் உதயநிதி வாங்கிய வெளிநாட்டு காரால் வினை!

Thursday, March 21, 2013
சென்னை::தி.மு.க, பொருளாளர் மு.க.,ஸ்டாலின் வீட்டில் இன்று சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஸ்டாலின் மகன் உதயநிதி வாங்கிய வெளிநாட்டு ஹம்மர் கார் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுகிறது. காங்., கூட்டணியில் இருந்து தி.மு.க.,விலகிய 2 நாட்களில் சி.பி.ஐ., தனது வேலையை துவக்கியுள்ளது. இந்த சோதனையை தாம் எதிர்ப்பதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இவ்வாறு நடத்தப்பட்டிருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா திருத்தம் செய்யப்பட்ட தீர்மானத்தை கொண்டு வர மறுத்து விட்டதால் மத்திய அரசில் இருந்து தி.மு.க., விலகியது. இது தொடர்பாக திமுக மத்திய அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை நேற்று பிரதமரை நேரில் சந்தித்து கொடுத்தனர். ராஜினாமா கடிதம் கொடுத்த 24 மணி நேரத்தில் காங்கிரசின் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று தனது அதிரடி ரெய்டை துவக்கினர்.

இன்று காலையில் மு.க.,ஸ்டாலினின் தேனாம்பேட்டை வீடு மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் வீடு என சென்னையில் பல இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருவாய் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் என பல குழுக்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது. வேளச்சேரி, தேனாம்பேட்டை, தி.நகர் என பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து மற்றும் வெளி நாட்டு கார் வாங்கியது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பழிவாங்கும் நடவடிக்கை: மு.க.,ஸ்டாலின் : ரெய்டு நடந்து கொண்டிருக்கும் போது நிருபர்களிடம் பேசிய மு.க.,ஸ்டாலின்; இது பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். கூட்டணியில் இருந்து விலகியதால் காங்கிரசின் கைப்பாவையான சி.பி.ஐ., இவ்வாறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது மிரட்டல், உருட்டல் என்றார். எந்த வழக்கையும் சட்டப்படி சந்திப்பேன் என்றார்.

ஸ்டாலின் மகன் மீது வழக்கு ?

இன்று நடந்து வரும் சோதனை ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினை மையமாக வைத்து இருக்கும் என தெரிகிறது. இவர் வாங்கியிருக்கும் வெளிநாட்டு கார் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனால் மகன் மீது ‌வழக்கு செய்யப்படும் என தெரிகிறது. இதற்கிடையில் காரை ஒப்படைக்க தயாராக இருப்பதாக ஸ்டாலின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

உள்நோக்கம் என்கிறார் பொன்முடி : அரசியல் வழிவாங்கும் நடவடிக்கையாக ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடைபெற்று வருவதாகவும், மத்திய அரசில் இருந்து திமுக விலகியதும் இந்த சோதனை நடத்தப்படுவதாகவும் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் கார் வாங்கி பல மாதங்கள் ஆன நிலையில் தற்போது சோதனை நடத்துவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

தவறாக பயன்படும் சி.பி.ஐ., :

தி.மு.க., எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், இது கண்டிப்பாக பழிவாங்கும் நடவடிக்கை தான் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது : காங்கிரஸ் அரசால் சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவதாக பொதுவாக கூறப்படுகிறது; தற்போது அது உண்மை என நிரூபணம் ஆகி உள்ளது; எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காக சிபிஐ பயன்படுத்தப்படுகிறது; எந்த வித புகாரும் குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது; சோதனையை தொடர்ந்து என்ன நடவடிக்கை இருக்கும் என தெரியவில்லை; எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை; எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. இவ்வாறு டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் எதிர்ப்பு ;

இன்று நடந்த சோதனைக்கு மத்திய நிதி அமைச்சர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் நான் இதனை ஏற்க மாட்டேன். இது தொடர்பாக சி.பி.ஐ. பொறுப்பு அமைச்சரிடம் பேசுவேன் என்றார். இவ்வாறு சோதனை நடத்தப்பட்டு இருக்க கூடாது. அமைச்சர் நாராயணசாமியிடம் பேசினார். பா.ஜ., மற்றும் இடது சாரிகள் இந்த சோதனை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். சி.பி.ஐ., காங்கிரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என விமர்சித்துள்ளனர்.

ஸ்டாலின் மகன் வாங்கிய கார் :

இன்றைய சோதனைக்கு ஸ்டாலின் மகன் உதயநிதி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ஹம்மர் கார் என தெரிய வருகிறது. இந்த காருக்கான சுங்க வரி சரியாக செலுத்வில்லை என தெரிகிறது. உதயநிதி இந்த காரை நேரிடையாக வாங்காமல் டீலரிடம் பெற்றதால் இந்த டீலர் வரியை செலுத்த தவறி விட்டதாக தெரிகிறது. இதனால் இன்று சி.பி.ஐ., ரெய்டு நடத்தியுள்ளனர்.

கட்சிக்கு எதிராக சதி: இந்த சோதனை குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறுகையில்; இத தமது கட்சிக்கு எதிரான சதி என கூறியுள்ளார்.

எதிர்க்கட்சியினர் அமளியினால் மக்களவை மீண்டும் ஒத்திவைப்பு!






No comments:

Post a Comment