Tuesday, March 5, 2013

தமிழக சிறைகளில் கஞ்சா விற்பனை கனஜோர்: அதிகாரிகள் பாக்கெட்டில் பண மழை!

Tuesday, March 05, 2013
சென்னை::தமிழக சிறைகளில், ஊழியர்ள் ஆதரவுடன் கஞ்சா விற்பனை கனஜோராக நடக்கிறது. சிறைத்துறை அதிகாரிகள் பணமழையில் நனைவதால், கஞ்சா விற்பனையை கண்டு கொள்வது இல்லை.

தமிழகத்தில், ஒன்பது மத்திய சிறைகள், மூன்று பெண்களுக்கான சிறப்பு சிறைகள், 12 சீர்திருத்த பள்ளிகள், ஐந்து சிறப்பு கிளை சிறைகள், ஒன்பது மாவட்ட சிறைகள், 94 கிளை சிறைகள், இரண்டு திறந்த வெளி சிறைகள் என, மொத்தம், 134 சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் சராசரியாக, 6,250 தண்டணைக் கைதிகளும், 4,750 குற்றக் கைதிகள், 1,801 விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைக் கைதிகளில், 60 சதவீத கைதிகள் ரவுடிகள். இவர்கள், சிறைகளில் கஞ்சா, பீடி, சிகரெட், பான்பராக், ஹான்ஸ் புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனையில் கொடி கட்டி பறக்கின்றனர். இது பற்றிய தகவலை, உளவுத்துறை அரசின் பார்வைக்கு கொண்டு சென்றது. அதை அடுத்து சிறைகளில் ஆய்வு மேற் கொண்ட சிறைத்துறை, ஏ.டி.ஜி.பி., திரிபாதி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை, சென்னை புழல் சிறை அதிகாரிகளை கடந்த மாதம் மாற்றம் செய்து உத்தரவிட்டார். இந்த மாற்றத்துக்கு பின்னரும், சிறைகளில் கஞ்சா விற்பனை கனஜோராக நடக்கிறது. விற்பனைக்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருப்பதால், கடத்துபவர்கள், விற்பவர்கள் எவ்வித தங்கு தடையின்றி, சிறைகளில் கடை விரித்து விற்பனையில் ஈடுபடுகின்றனர்.

தமிழக சிறைத்துறை அதிகாரிகளின் அறிக்கையின் படி, தமிழகத்தில், 2012ல், 5,250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதில் மற்ற சிறைகளை விட, சென்னை புழல், மதுரை, கோவை, திருச்சி, வேலூர், சேலம் சிறைகளில் அதிக அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிறைகளில் கஞ்சா விற்பனை தொடர்கிறது. சில ஆண்டுகளுக்கு முன், சிறைகளில் கஞ்சா விற்பவர், கடத்துபவர் சிறை ஊழியர்களிடம் சிக்கும் பட்சத்தில் அவர்களை போலீஸில் தான் ஒப்படைப்பர். தற்போது சிறை அதிகாரிகளே அவற்றை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்யாமல், அறைகள், பிளாக்குகளுக்குகளில் கைதிகளை மட்டும் மாற்றம் செய்து, தவறை அப்படியே மறைத்து விடுகின்றனர். இதன் காரணமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடும் கைதிகள் தொடர்ந்து, அதை செய்து வருகின்றனர். கைதிகளுக்கு தேவையான கஞ்சா பொட்டலங்களை, வார்டன்களே கடத்துவதும், மூன்று சிப்டாக பணிக்கு வரும் வார்டன்கள், அமைச்சுப் பணியாளர்கள் உள்ளே கொண்டு வந்து, கைதிகளிடம் விற்பனை செய்வதும் அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

இன்றைய நிலவரப்படி சிறைகளில் வெளியில் இருந்து உள்ளே கொண்டு வரப்படும், 250 கிராம் கஞ்சா, 10 ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு கிலோ கஞ்சா ,40 ஆயிரம் ரூபாய் வரை விற்கிறது. இந்த விலையில், அதிகாரிகளின் பங்கு, கடத்தல் கும்பலுக்கான கூலி, உள்ளூர் போலீஸாருக்கு மாமூல் ஆகிய அனைத்தும் அடங்கி விடுகிறது. இதை பிரித்து சிட்டிகை கணக்கில், பொட்டலமாக தயார் செய்து, 10 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலம், 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விற்பனை கணக்கின் படி, கைதிகளிடம் விற்பனை செய்யும் போது, விற்பனையில் ஈடுபடுவர்களுக்கு கிலோவுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. அது மட்டுமின்றி பீடி கட்டுக்கள், சிகரெட், ஹான்ஸ் புகையிலை, பான்பராக் ஆகியன வெளியில் விற்பனை செய்யப்படும் விலையை விட மூன்று முதல், பத்து மடங்கு வரை அதிகரிப்பு செய்து விற்கின்றனர். இந்த விற்பனைக்கு, சிறை வார்டன் உட்பட அனைவருமே ஒத்துழைப்பு வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறைகளில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில், அதிரடி வேட்டை நடத்த சிறைத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சிறைகளில் கஞ்சா சிக்கும் பட்சத்தில், அதை வைத்திருந்த கைதி மீது மட்டுமின்றி, அந்த சிறை அறையை கண்காணித்து வந்த அலுவலகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சிறைகளில் உள்ள கைதிகளுக்கு கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை அதிகாரிகள், ஊழியர்களே சப்ளை செய்வதாக புகார் எழுந்துள்ளது. அது குறித்து முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், சிறையில் உள்ள கைதிகளுக்கு கஞ்சா உள்ளிட்டவற்றை கடத்தி வர மறுக்கும், அதிகாரிகள் பணிக்கு வரும் நிலையில், அவர்களின் வீடுகளுக்கு ரவுடிகளை அனுப்பி, பெண்கள், குழந்தைகளிடம், சிறையில் உள்ளவர்களின் ஆட்கள் மிரட்டுகின்றனர். இது போன்று பாதிப்புக்கு உள்ளான அதிகாரிகளிடம் ரகசிய வாக்குமூலம் வாங்கப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு அறிக்கையாக அனுப்பி உள்ளோம். அதன் படி, இது போன்ற மிரட்டலில் ஈடுபடும் ரவுடிகளை விரைவில் வேறு சிறைக்கு மாற்ற உள்ளோம். வெளியில் தெரிவிக்க முடியாத நடவடிக்கையும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment