Thursday, March 28, 2013

கச்சத்தீவை திரும்பப்பெற ஜெ., செய்தது என்ன? கருணாநிதி கேள்வி!

Thursday, March 28, 2013
சென்னை::மூன்று முறை முதல்வராக இருந்த ஜெயலலிதா, கச்சத்தீவை திரும்பப்பெற எடுத்த நடவடிக்கைகள் என்ன என தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சத்தீவை இலங்கைக்கு அளிக்க மத்திய அரசு முயன்ற போது அதை அப்போதைய தி.மு.க., அரசு கடுமையாக எதிர்த்தது என்று தெரிவித்துள்ளார். தங்களின் கடுமையான எதிர்ப்புக்கு இடையே கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 1974ம் ஆண்டு தி.மு.க., கொண்டு வந்த தீர்மானத்தில், கச்சத்தீவில் தமிழர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என அப்போதைய பிரதமர் இந்திராவை தாங்கள் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ள அவர், இது தொடர்பாக
தி.மு.க., உறுப்பினர்கள் பார்லிமென்ட்டில் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1994ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா, அப்போதைய பிரதமர் நரசிம்மராவுக்கு எழுதிய கடிதத்தில், இந்தியா இலங்கை இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் விதமாக கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதே போல், கடந்த 2003ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கு கடிதம் எழுதிய ஜெ., இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படாத வகையில், கச்சத்தீவை நீண்டகால குத்தகைக்கு எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருந்துள்ள ஜெயலலிதா, கச்சத்தீவை திரும்பப்பெற எடுத்த நடவடிக்கை தான் என்ன எனவும் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment