Wednesday, March 27, 2013

கருணாநிதி பேரன் அணியில் இலங்கை வீரர்கள்- ஜெ.கடும் சாடல்!

Wednesday, March 27, 2013
சென்னை::இலங்கையில் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து இன்று தமிழ சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். அதற்கு பதிலளித்து அரசின் தீர்மானத்தை முன் மொழிந்து பேசினார் தமிழ முதல்வர் ஜெ.ஜெயலலிதா.

அவர் அரசின் தீர்மானத்தை முன் மொழிந்து பேசியதாவது:-

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை குறித்தும், இந்தப் பிரச்சனை தொடர்பாக மாணவ- மாணவியர் நடத்தி வரும் போராட்டம் குறித்தும் உறுப்பினர்கள் இந்த அவையினுடைய கவனத்திற்கு கொண்டு வந்து தங்களது கருத்துகளைத் தெரிவித்து இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினை தொடர்பாக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எனது விளக்கத்தினை மாமன்றத்திற்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக கருதப்படுவதை எதிர்த்தும், இலங்கை அரசின் இனவெறிக் கொள்கையை எதிர்த்தும் அங்குள்ள தமிழர்கள் 1980-ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தே குரல் எழுப்பி வருகிறார்கள். இந்த நீண்ட நெடிய உரிமைப் போராட்டத்தை நசுக்கும் வண்ணம், ஒட்டுமொத்த தமிழினத்தையே அழிக்க வேண்டும் என்ற நோக்கில் 2007-ம் ஆண்டிலிருந்து திட்டம் தீட்டி, அதனை வெற்றிகரமாக 2009-ம் ஆண்டு நிறைவேற்றியது இலங்கை அரசு. தமிழினத்தை அழித்த சிங்கள வெறிபிடித்த இலங்கை அரசுக்கு அனைத்துவிதமான உதவிகளையும் செய்தது தி.மு.க. அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு.

இலங்கை ராணுவத்தினருக்கு இந்திய மண்ணில் இந்திய ராணுவம் ரகசியமான முறையில் போர் பயிற்சி அளித்தது, இலங்கை ராணுவத்திற்கு இந்திய அரசு ஆயுதங்களை வழங்கியது, மிக நவீன ராணுவ ரேடார் கருவிகளை வழங்கியது, இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் இந்திய அரசின் உயர் அதிகாரிகள் இலங்கைக்கு அடிக்கடி சென்றது, என பல செய்திகளை அப்போது ஊடகங்கள் படம் பிடித்துக் காண்பித்தன. நானும் இது குறித்து அறிக்கைகள் வெளியிட்டு, இந்திய அரசின் தமிழின விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தேன்.

இந்தச் செய்திகளுக்கு எல்லாம் மத்திய அரசு எவ்வித மறுப்பையும் தெரிவிக்கவில்லை. தமிழர் நலனை முன்னிட்டு மத்திய காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க. வெளியேற வேண்டும் என்றும் அப்போதே நான் தெரிவித்து இருந்தேன். ஆனால், அப்போது மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியோ, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ‘இரண்டு வாரத்தில் போர் நிறுத்தத்துக்கு மத்திய அரசு முன்வராவிட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா’ என்ற அளவில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார். பின்னர் ராஜினாமா கடிதங்கள் யாரிடம் கொடுக்கப்பட்டன என்பதை உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.

சில நாட்கள் கழித்து, அப்போதைய மத்திய அமைச்சர் பிராணாப் முகர்ஜி கருணாநிதியை சந்தித்த பிறகு, “மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக இருக்கிறது” என்று தெரிவித்து ராஜினாமா நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் கருணாநிதி.

இதனையடுத்து, டெல்லி வந்த இலங்கை அதிபர் பிரதமரை சந்தித்த பிறகு “போர் நிறுத்தம் கிடையாது” என்று அறிவித்தார். பின்னர், “இந்தியப் பேரரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இலங்கை அரசைப் போர் நிறுத்தத்திற்கு இணங்க வைத்து தமிழர் பகுதிகளில் நிலையான அமைதியும், சக வாழ்வும் ஏற்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்ற அளவில் 12.11.2008 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘அனைத்துக் கட்சிக் கூட்டம்’, ‘சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம்’, ‘தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்’, ‘மனிதச் சங்கிலி போராட்டம்’, ‘நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் கடிதங்களை கருணாநிதியே பெற்றுக் கொள்ளுதல்’, ‘எல்லோரும் பிரதமருக்கு தந்தி அனுப்புங்கள்’ என்ற அறிவிப்பு, ‘டெல்லியில் பிரதமருடன் சந்திப்பு’, ‘வேலை நிறுத்தம்’, ‘பேரணி’ என பல்வேறு கண்துடைப்பு நாடகங்கள் தான் நடந்தனவே தவிர ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

இவையெல்லாம் நடந்த வரலாற்று உண்மைகள். வரலாற்றை மறுக்க முடியாது, மறைக்க முடியாது. ‘இலங்கையில் போரை நிறுத்த ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்லி போரை தீவிரப்படுத்தியதுதான் மிச்சம். கடைசியாக நடைபெற்ற கருணாநிதியின் மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகத்தின் மூலம் லட்சக்கணக்கான அப்பாவி இலங்கைத் தமிழர்கள் ஒரே நாளில் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர். ஆனால், இந்த மூன்று மணி நேர உண்ணாவிரதத்தைப் பற்றி புது விளக்கங்களை சமீப காலமாகக் கூறி வருகிறார் கருணாநிதி.

இலங்கையில் தமிழர்கள் மீதான போரை நிறுத்திவிட்டதாக இலங்கை அரசு மத்திய அரசுக்கு தெரிவித்ததாகவும், அதனை மத்திய அரசு நம்பி தனக்கு தெரியப்படுத்தியதாகவும், அதனைத் தான் நம்பி இலங்கையில் போர் முடிந்துவிட்டது என்று அறிவித்ததாகவும், இலங்கை அரசு அவ்வாறு ஏமாற்றிவிட்டதாகவும் சமீப காலமாக கருணாநிதி கூறி வருகிறார். இதனை எந்தத் தமிழரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது” என்று கூறி தனது உண்ணாவிரத நாடகத்தை மூன்று மணி நேரத்தில் முடித்துக் கொண்டதற்கு அடுத்த நாள், “கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடைபெறுவதாக செய்திகள் வந்திருக்கிறதே” என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பார்களே, அதைப்போலத்தான்...” என்று பதில் அளித்தார் கருணாநிதி. அதாவது போர் நிறுத்தம் ஏற்படவில்லை என்பதை நன்கு உணர்ந்துதான் இது போன்ற பேட்டியை அளித்துள்ளார் கருணாநிதி.

இலங்கையில் உச்சக்கட்டப் போர் முடிவுக்கு வந்த பிறகு, 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் எவ்வித அடிப்படை வசதியுமின்றி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இலங்கை அரசால் கொடுமைப்படுத்தப்படுகின்றனர், இதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் பலமுறை வலியுறுத்தினேன். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் இருந்த கருணாநிதியோ, தன் மகள் கனிமொழி உட்பட தி.மு.க. மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி, இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை அதிபரைச் சந்திக்க வைத்து, கை குலுக்கி, விருந்துண்டு, பரிசுப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளச் செய்தார். பரிசு பொருட்களைப் பெற்று வந்த அவர்களை தி.மு.க. தலைவர் கருணாநிதி விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்றார். பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கருணாநிதி, “முகாம்களில் தமிழர்கள் யாரும் சித்திரவதை செய்யப்படவில்லை” என்று பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது, தானும், தன் குடும்பத்தினரும் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக இலங்கைத் தமிழர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதலுக்கு உறுதுணையாக, ஆதரவாக இருந்து, அவர்கள் அழிவதற்கு மறைமுகக் காரணமாக விளங்கிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை இழந்த பின், டெசோ அமைப்பை மீண்டும் புதுப்பித்துள்ளார். திடீரென்று ஞானோதயம் பிறந்தது போல் இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் அதிக அக்கறை செலுத்துவது போல் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.

மத்திய அமைச்சரவையிலிருந்து வெளி வந்ததை இலங்கை தமிழர்களுக்காகதான் செய்த மிகப்பெரிய தியாகம் என்று சித்தரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் கருணாநிதி. மத்திய அரசுக்கும் தி.மு.க.வுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று காட்டிக் கொள்ளும் கருணாநிதி, ரெயில்வே குழுத் தலைவர் பதவியில் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர், டி.ஆர். பாலு இன்று வரை தொடருவது குறித்து வாய் திறக்கவில்லையே! மத்திய அமைச்சராக இருந்த தனது மகன் அழகிரி காங்கிரஸ் தலைவரையும், பிரதமரையும், மத்திய அமைச்சர் சிதம்பரத்தையும் சந்தித்து இருக்கிறார்.

ராஜினாமா செய்த பின் உங்கள் மன நிலை என்ன? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அலுவலகத்திற்கு போக முடியவில்லை, மக்களுக்கு சேவை செய்ய முடியவில்லை” என்று கூறி இருக்கிறார் அழகிரி. இலங்கைத் தமிழர்கள் அழியக் காரணமாக இருந்த மத்திய அரசுக்கு உறுதுணையாக இருந்தததையும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி விலைவாசி உயர்விற்கு வித்திட்டதற்கு உறுதுணையாக இருந்ததையும் “மக்கள் சேவை” என்று குறிப்பிடுகிறார் போலும்! இதுகுறித்து கருணாநிதி கருத்து தெரிவிக்கவில்லையே! தி.மு.க. செயற்குழுவில் பேசிய தி.மு.க. பொதுச் செயலாளர் க. அன்பழகன், மத்தியில் ஆட்சியை கவிழ்க்க தி.மு.க. துணை போகாது என்று பேசியிருக்கிறார். இதை கருணாநிதி கேட்டுக் கொண்டு வாய்மூடி மவுனியாகத்தான் இருந்தார்.

இந்த விஷயங்களில் எல்லாம் கருணாநிதி மவுனம் சாதிப்பதைப் பார்த்தால், மத்திய அரசுடனான தொடர்பை எவ்விதத்திலும் துண்டிக்க கருணாநிதிக்கு விருப்பமில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. மறைமுக உறவை தொடர்ந்து கொண்டு தியாகம் செய்து விட்டது போல் வெளி வேடம் காட்டி தமிழக மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். இதைவிட தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது. இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான கொடூர நடவடிக்கைகளினால், தமிழ்நாட்டில் வாழும் மக்கள் இயற்கையாகவே வெறுப்பும், கோபமும் அடைந்துள்ள சூழ்நிலையில், இலங்கை நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்படக்கூடாது என்று பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன்.

தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை நாட்டைச் சேர்ந்த வீரர்கள், நடுவர்கள் மற்றும் அதிகாரிகளை அனுமதிக்க வேண்டாம் என்று ஐ.பி.எல். அமைப்பாளர்களை வற்புறுத்துமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மத்திய அரசு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளேன். இலங்கை நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை ஐ.பி.எல். அமைப்பாளர்கள் அளித்தால் மட்டுமே ஐ.பி.எல். விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெற தமிழக அரசு அனுமதிக்கும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தேன். எனது வேண்டுகோளினை பரிசீலித்த ஐ.பி.எல். ஆட்சிமன்றக் குழு, சென்னையில் நடைபெற இருக்கும் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று முடிவெடுத்து, இது குறித்த ஆலோசனையை அணிகளின் உரிமையாளர்களுக்கு தெரிவிப்பதென தீர்மானித்துள்ளது. இது, இலங்கைத் தமிழர்களின் பால் எனது தலைமையிலான அரசு கொண்டுள்ள உணர்வுப்பூர்வமான ஈடுபாட்டிற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி.

No comments:

Post a Comment