Monday, March 25, 2013
பொதுநலவாய நாடுகள் அமைச்சர்குள் மாநாட்டில் இலங்கை விவகாரம் குறித்து பேசப்பட மாட்டாது என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதம் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அமைச்சர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் இலங்கை விவகாரம் பற்றி பேசும் உத்தேசம் கிடையாது எனவும், நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை, வேறும் நாட்டில் நடாத்துமாறு கனடா கோரி வருகின்றது.
இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமாகக் காணப்படுவதாகவும் இதனால் பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் மாநாட்டில் இந்த விடயம் குறித்து பேசப்பட வேண்டுமெனவும் கனடா வலியுறுத்தியுள்ளது.
எவ்வாறெனினும், ஏற்கனவே திட்டமிட்டவாறு எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் அமர்வுகள் நடைபெறும் எனவும், அமைச்சர்கள் மாநாட்டில் இந்த விடயம் குறித்து பேசப்பட மாட்டாது எனவும் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
2013ம் ஆண்டில் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை நடாத்த வேண்டுமென ஏற்கனவே நாட்டுத் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாகவும், இந்தத் தீர்மானத்தை அமைச்சரவைக் கூட்டத்தில் மாற்றியமைக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏப்ரல் மாதம் லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் மாநாட்டில் இலங்கையும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்துவதன் மூலம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துரித கதியில் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறும், இதற்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பு பூரண ஆதரவளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment