Thursday, March 28, 2013
இலங்கை::(புலி)கூட்டமைப்பின் துரோகத்தின் தொடர்கதை: ஜெனிவா சென்ற நாட்டுப் பற்றற்ற துரோகிகளின் முயற்சிகளை முறியடிக்க மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு தேசப்பற்றுடன் செயற்பட வேண்டும்!
அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் நிறைவேற்றிய பிரேரணையை மையமாக வைத்து நாட்டுக்குள்ளும், நாட்டுக்கு வெளியிலுமுள்ள தேசத்துரோக சக்திகள் இலங்கை அரசாங்கத்துக்கு தீங்கிழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாட்டு மக்களிடையே இருந்துவரும் ஒருமைப்பாட்டையும், நல்லுறவையும் சீர்குலைப்பதற்கு இப்போது பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளன. சிறு சிறு பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தி நாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்துவதே இந்தத் தேசத்துரோக சக்திகளின் குறிக்கோளாக இருக்கின்றது.
இவர்கள் நாட்டுக்கு என்ன கேடு ஏற்பட்டாலும் பரவாயில்லை அரசாங்கத்தை சர்வதேச ரீதியில் அவமானச் சின்னமாக மாற்ற வேண்டுமென்ற குறிக்கோளுடனேயே செயற்பட்டு வருகின்றார்கள். சிறு சிறு விடயங்களைக் காரணமாக வைத்துக் கடையடைப்புக்கள் மற்றும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை செய்ய வேண்டுமென்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான பல எதிர்க்கட்சிகள் இப்போது தேசத்துரோகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தத் தேசத்துரோகிகளுக்குத் தாங்கள் செய்யும் தவறான செயற்பாடுகளால் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய பக்க விளைவுகளைப் பற்றி சிறிதேனும் அக்கறையில்லை. எப்படியாவது அரசாங்கத்தை வீழ்த்திவிட வேண்டும். சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்களைக் கொண்டு வந்து எங்கள் நாட்டுக்குக் கிடைக்கும் பொருளாதார உதவிகளைத் தடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனேயே ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய எதிர்க் கட்சிகளும் இந்த தேசத்துரோக சக்திகளுடன் இணைந்து இத்தகைய எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இது மட்டுமன்றி மக்கள் மத்தியில் பொய்யான வதந்திகளைப் பரப்பு வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி சேனையொன்றையே வைத்துள்ளது. இச்சேனையைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் புரளிகள் மற்றும் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு மக்களைத் தூண்டி விடுகின்றது. இதற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை கலவரத்துக்கு முன்னர் ஐக்கிய தேசியக்கட்சி தமிழ் மக்களை அடக்கிவைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அன்று ஒரு சர்வாதிகாரியைப் போன்று நடந்து கொண்ட அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தன தலைமையில் செயற்பட்டது. 1970 ஆம் ஆண்டு தசாப்தத்தின் ஆரம்பத்தில் தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பு தமிழ் மக்களின் உரிமைகளுக்காக சாத்வீகப் போராட்டத்தை ஆரம்பித்தபோது அவர்களை ஹிட்லரைப் போன்று ஜே.ஆர். ஜயவர்தன துப்பாக்கி முனையிலும், கறுப்பு உடையணிந்த தனது பிரத்தியேக ஆயுதப் படை மூலம் வாள்களால் வெட்டித் துன்புறுத்தியதையும் இன்றைய சந்ததியினர் மறந்திருந்தாலும் அது தான் உண்மை.
அவ்வித அடக்கு முறைகளின் பக்கவிளைவாகவே தமிழ்க் குழுக்கள் ஆயுதம் தாங்க வேண்டுமென்ற தவறான வழியில் ஈடுபட்டன. அதற்கும் நாம் அப்போதைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனையே குற்றஞ்சாட்ட விரும்புகின்றோம். அன்று ஜே. ஆர். ஜயவர்த்தனவைப் போன்று இந்தியாவில் தான் நினைத்ததையே நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்பட்டுக் கொண்டிருந்த பிரதம மந்திரி இந்திரா காந்தி இந்தியாவை மதிக்காமல் ஜே. ஆர். ஜயவர்த்தனவின் நிர்வாகம் சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் நெருக்கமாகி வருவதை பார்த்து ஆத்திரமடைந்தார்.
ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனவின் அரசாங்கத்துக்கு ஒரு தக்கபாடம் புகட்ட வேண்டுமாயின் இந்தியா, இந்தத் தமிழ் ஆயுதக் குழுக்களுக்குப் பூரண ஆதரவளித்து அவர்களுக்கு தங்கள் நாட்டிலேயே அதுவும் தமிழ் நாட்டிலேயே தனியான முகாம்களை அமைத்து ஆயுதப் பயிற்சி அளிக்க வேண்டும் என திருமதி இந்திரா காந்தி தீர்மானித்து அதனை மளமளவென்று நிறைவேற்ற ஆரம்பித்தார். அதனால் தான் ஷொட்கன் என்ற ஒரு தோட்டா துப்பாக்கியைக் கூட சரியான முறையில் பயன்படுத்தி ஒரு காகத்தைக் கூடச் சுட்டுத்தள்ள முடியாதிருந்த அன்றைய தமிழ் இளைஞர்கள் பின்னர் உலகத்தையே ஆட்டிப் படைக்கக் கூடிய உலகின் மிகக் கொடுமையான இயக்கமாக எல். ரி. ரி. ஈ. யை உருவாக்கினார்கள்.
அதற்குப் பின்னர் நடந்த விடயங்களை நாம் அறிவோம். இந்திரா காந்தியின் அகால மரணத்தையடுத்து ராஜீவ் காந்தி அதிகார பீடத்தில் பிரதம மந்திரியாக அமர்ந்திருந்தபோது மீண்டும் ஜே. ஆர். ஜயவர்த்தனவின் நிர்வாகத்தைத் துன்புறுத்த வேண்டுமென்று பருப்பு மற்றும் அரிசிப் பொருட்களை விமானத்தில் கொண்டு வந்து இறைமை மிக்க நாடான இலங்கையின் வட பகுதியில் தரையில் தொப்பென்று இறக்கிவிட்டார். அதையடுத்து ராஜீவ் காந்தி திடீரென்று 1987 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஆறு மணித்தியால முன்னறிவித்தலுடன் தனது சிரேஷ்ட அமைச்சர் களுடன் இலங்கைக்கு வந்திறங்கி ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவைப் பலவந்தப்படுத்தி 1987 ஆம் ஆண்டில் இலங்கை இந்திய நட்புறவு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்.
அதற்குப் பின்னர் சுமார் ஒரு இலட்சம் இந்திய அமைதிகாக்கும் படையினர் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி யாழ்ப்பாணத்திலும், கிழக்கு, மாகாணத்திலும் விமானம் மூலம் கொண்டுவந்து இறக்கப்பட்டனர். அதையடுத்து ராஜீவ் காந்தியின் மரணம் ஜனாதிபதி பிரேமதாசவின் மரணம் போன்றவற்றுக்கும் எல். ரி. ரி. ஈ. யே பொறுப்பாக இருந்தது.
இப்படியான நிகழ்வுகள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது. எனவே எங்கள் நாட்டில் கிராம மட்டத்திலிருந்து பாடசாலைகளிலிருந்து இனஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் பொதுமக்களும், சமூக அமைப்புக்களும், மத ஸ்தாபனங்களும் ஈடுபட முன்வர வேண்டும். இவ்விதம் பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்த முன்வரவேண்டும். நாம் அவ்விதம் இளைஞர்களிடம் நாட்டுப்பற்றை வளர்த்தால் எந்தவொரு தேசத்துரோக சக்தியும் இலங்கையில் வந்து தங்கள் நாசவேலைகளை செய்வது கஷ்டமாக இருக்கும். எனவே இனி மேல் சிலதவறான வழிகாட்டல்களில் நாம் ஈடுபடாமல் சகல இன மக்களையும் ஒருமைப்படுத்தக்கூடிய செயற்பாடுகளில் இறங்குவது நாட்டுக்கும், எங்களுக்கும், நாட்டின் எதிர்காலத்துக்கும் சிறந்த நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.



.jpg)




No comments:
Post a Comment