Wednesday, March 20, 2013
புதுடெல்லி::ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம் மீது மத்திய அரசின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரி பாராளு மன்றத்தில் இரு அவையிலும் அ.தி.மு.க, தி.மு.க. உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இலங்கை தமிழர் பிரச்சினையால் இன்று பாராளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது.
பாராளுமன்றம் இன்று கூடியதும் சபாநாயகர் மீராகுமார் முன்னாள் உறுப்பினர் நரேஷ்குமார் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்தார். அனுதாபம் தெரிவிக்கப்பட்ட மறு நிமிடமே தமிழக எம்.பி.க்கள் சபையின் மைய பகுதிக்கு வந்து கோஷ மிட்டனர். அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு எதிராக கோஷமிட்டனர்.
சமாஜ்வாடி உறுப்பினர்கள் முலாயம்சிங் யாதவை விமர்சித்த மத்திய மந்திரி பெனிபிரசாத் வர்மாவை டிஸ்மிஸ் செய்யக்கோரி கோஷமிட்டனர். உறுப்பினர்களின் அமளியால் சபையை மதியம் 12 மணி வரை சபாநாயகர் மீராகுமார் ஒத்தி வைத்தார். 12 மணிக்கு சபை மீண்டும் கூடியதும் இலங்கை பிரச்சினையால் மீண்டும் அமளி ஏற்பட்டது. இதனால் 30 நிமிடத்துக்கு சபை ஒத்தி வைக்கப்பட்டது.
டெல்லி மேல்சபை இன்று கூடியதும் மராட்டியத்தில் சாலை விபத்தில் பலியான 37 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் இலங்கை தமிழர் பிரச்சினையை கிளப்பினார்கள். சபையின் மைய பகுதிக்கு வந்து தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்று தமிழக எம்.பி.க்கள் கோஷமிட்டனர். இதே போல் சமாஜ்வாடி உறுப்பினர்கள் மத்திய மந்திரி பெனி பிரசாத் வர்மாவை டிஸ்மிஸ் செய்ய கோரி கோஷமிட்டனர். இதனால் அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி 12 மணி வரை சபையை ஒத்தி வைத்தார். 12 மணிக்கு சபை கூடியதும் இலங்கை தமிழர் உள்பட பல்வேறு பிரச்சினைகளால் அமளி ஏற்பட்டது. இதனால் சபை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

No comments:
Post a Comment