Tuesday, March 5, 2013

டில்லியில் (புலி ஆதரவு) டெசோ' கருத்தரங்கு: காங்கிரஸ்., முடிவு என்ன?

Tuesday, March 05, 2013
புதுடில்லி::டில்லியில், தி.மு.க., நடத்தும், (புலி ஆதரவு) டெசோ' கருத்தரங்கில் பங்கேற்பது குறித்து, ஆலோசித்து முடிவெடுக்க, காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

காங்கிரஸ் துணை தலைவர் ராகுலை, டில்லியில் நேற்று, தமிழக காங்கிரஸ், எம்.பி.,க்கள், சந்தித்தனர். பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள, காங்கிரஸ் அலுவலகத்தில், இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, தமிழக காங்கிரசை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், ஜெயந்தி நடராஜன் மற்றும் தமிழக, காங்., மேலிடப் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் ஆகியோர் உடனிருந்தனர். அரை மணி நேரம் நீடித்த, இந்தச் சந்திப்பில், இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதன்பின், சந்திப்பு தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: ராகுலை, தமிழக, காங்., - எம்.பி.,க்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் சந்தித்த போது, தமிழகத்தில், இலங்கை விவகாரம் கையாளப்படும் விதம் குறித்து விவாதிக்கப்பட்டது. இலங்கை தமிழர்களுக்கு, காங்கிரஸ் எவ்வளவோ நன்மைகளை செய்தாலும், அவற்றுக்கு எதிர்மாறான பிரச்சாரம், தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும், இலங்கை பிரச்னையை மையமாக வைத்து, தேர்தல் வியூகங்களை வகுக்கின்றன. இலங்கை பிரச்னையில், காங்கிரஸ் மீது அதிருப்தி உண்டாகும் அளவுக்கு மற்றும் தனிமைப்படுத்தப்படும் அளவுக்கு, நடவடிக்கைகள் தீவிரமாக உள்ளன. இதை முறியடிக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், காங்கிரஸ் பல நடவடிக்கைகளை, எடுக்க வேண்டியது அவசியம். இலங்கைக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபையில், முன்னர் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, அதை ஆதரித்து, இந்தியா ஓட்டுப் போடப்பட்டது. இப்போது மறுபடியும் தீர்மானம் வரப்போகிறது. அமெரிக்கா கொண்டு வரவுள்ள அந்த தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலைப்பாட்டை, மத்திய அரசு எடுக்க வேண்டும்.

டில்லியில், தி.மு.க., சார்பில் (புலி ஆதரவு) டெசோ கருத்தரங்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் பங்கேற்பதா, வேண்டாமா என்பதை, தெளிவுபடுத்த வேண்டும். ஈழம் என்ற வார்த்தையில் உடன்பாடு இல்லை என்றாலும்,டெசோ மாநாட்டில் கலந்து கொண்டு, இலங்கை விஷயத்தில், காங்கிரசுக்கு உள்ள அக்கறையை எடுத்துக் கூறுவதே, சரியானதாக இருக்கும் என, ராகுலிடம் தமிழக காங்., - எம்.பி.,க்கள் கூறினர். அனைத்தையும் கேட்ட ராகுல், "இது விஷயமாக கட்சித் தலைவர் சோனியாவுடன், குலாம்நபி ஆசாத் ஆலோசனை நடத்துவார்.  டெசோ மாநாட்டில் கலந்து கொள்வதா, வேண்டாமா என்பது குறித்து, அதன்பின் முடிவெடுக்கப்படும். இன்று இரவுக்குள் முடிவு வெளியாகி விடும்' என்றார். இவ்வாறு தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.

இந்நிலையில், நாளை மறுநாள், டில்லி, கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெறவுள்ள, டெசோ கருத்தரங்கிற்கு தி.மு.க., தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. உள்ளரங்கு கூட்டமாக, மாலை, 4:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை நடைபெறும் கருத்தரங்கில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, பங்கேற்கவில்லை. மாறாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், பங்கேற்கிறார். இந்த கருத்தரங்கிற்கு, 100க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களை அழைத்து, இலங்கை பிரச்னை குறித்து, விரிவாக விளக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment