Monday, March 25, 2013

வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் ஹர்த்தால்


 Monday, March 25, 2013
இலங்கை::முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளைக் கண்டித்து வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த கடையடைப்பு ஹர்த்தாலுக்கு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு (MRO) அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மைகாலமாக இலங்கை முஸ்லிம்களை குறிவைத்து இடம்பெற்றுவரும் அசாதாரண சூழ் நிலையை கண்டிக்கும் வண்ணமும் பொது பலசேனாவின் செயற்பாட்டுக்கு ஏதிர்ப்புத் தெரிவித்தும் இந்த கண்டன கடையடைப்பும் ஹார்த்தாலும் இடம்பெறுகிறது.

தற்போது நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலைக்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும். பொதுபல சேனா என்ற அமைப்பின் அடக்கு முறைக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியே இன்று நாடு தழுவிய ரீதியில் இந்த அமைதியான கடையடைப்பு ஹர்த்தால் இடம்பெற்று வருகின்றது.

அதேவேளை, இன்றைய தினம் ஹர்த்தால் அனுஷ்டிக்க வேண்டாம் எனக் கோரி காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமாவும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும் இணைந்து பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

அது போன்று இரு முக்கிய தேரர்களுடன் இணைந்து அசாத் சாலியும் ஹர்த்தால் மேற்கொள்ள வேண்டாம் என முஸ்லிம்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதேவேளை முஸ்லிம் உரிமைகள் அமைப்பின் அழைப்பை ஏற்று தேசிய முஸ்லிம் கவுன்ஸில், முஸ்லிம் சுதந்திர முன்னணி, முஸ்லிம் மக்கள் கட்சி, ஐக்கிய மறுமலர்ச்சி மன்றம் உள்ளிட்ட பல அமைப்புகள் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியுள்ளன.

ஏறாவூரில்….

இன்று 25.03.2013 திங்கள் காலையில் இருந்து ஏறாவூர் நகர் முழுக் கடையடைப்பால் வெறிச்சோடியிருக்கின்றது.

ஹர்த்தால் கடையடைப்பை இன்று மேற்கொள்ள வேண்டாம் என நேற்றிரவு முதல் அடிக்கடி பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளிலும் ஏனைய குறுஞ்செய்திச் சேவைகளுக்கூடாகவும் தகவல்கள் கூறப்பட்டிருந்தபோதும் அவை புறக்கணிக்கப்பட்டு முழுமையான ஹர்த்தால் இடம்பெறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

தவணைப் பரீட்சை காரணமாக பாடசாலைகள் வழமைபோன்று இயங்குகின்றன.

காத்தான்குடியில்…

காத்தான்குடி நகரில் வர்த்தக நிலையங்கள் மற்றும் பொதுச் சந்தை அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் பாடசாலைகளும் அரச அலுவலகங்களும் வழமைபோன்று இயங்குகின்றன. போக்குவரத்துக்கள் வழமைபோன்று இடம்பெறுகின்றன.

ஹர்த்தாலில் ஈடுபட வேண்டாம் என நேற்றிரவு காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளனமும் ஜம்இய்யதுல் உலமாவும் இணைந்து பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளின் அறிவித்தல் விடுத்திருந்தன. அத்துடன் இன்றைய தினம் வர்த்தக நிலையங்களை மூட வேண்டாம் என பொலிசாரும் இராணுவத்தினரும் இப் பிரேதச வர்த்தகர்கள் மற்றும் முக்கியஸ்தர்களிடம் வேண்டுகோள்விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்குடாவில்….

ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

கல்முனையில்….

கல்முனை நகர் ஹர்த்தால் காரணமாக வெறிச்சோடியிருக்கிறது. சகல தனியார் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளும் அரச அலுவலகங்களும் வழமைபோல் இயங்குகின்றன. போக்குவரத்து வழமைபோன்று இடம்பெறுகின்றது. இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோன்று அம்பாறை மாவட்டத்தில் பல முஸ்லிம் பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில்….

யாழ்ப்பாண நகரின் முஸ்லிம் பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

திருமலை நகரில்….

திருகோணமலை நகரில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் பாடசாலைகளும் அரச அலுவலங்களும் இயங்குகின்றன. போக்குவரத்தும் வழமைபோன்று இடம்பெறுகின்றது.

No comments:

Post a Comment