Tuesday, March 19, 2013

இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு கோரி திரைப்பட இயக்குனர்கள் உண்ணாவிரதம்!

Tuesday, March 19, 2013
சென்னை::இலங்கையில் அப்பாவி இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், இலங்கைக்கு எதிராக ஐநாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய அரசு உடனே நடைமுறைப்படுத்த வேண்டும், ராஜபக்சேவை சுதந்திரமான பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், ஈழ தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் அதற்கு ஏதுவாக இலங்கையில் தமிழர் பகுதியில் திணிக்கப்பட்டிருக்கும் குடியேற்றத்தை உடனே வெளியேற்ற இலங்கையை இந்தியா நிர்பந்திக்க வேண்டும், இலங்கை உடனான உறவை இந்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. இயக்குனர் அமீர் தலைமை தாங்கினார்.

டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், கவுதம் மேனன், லிங்குசாமி, எஸ்.ஜே.சூர்யா, ஆர்.பாண்டியராஜன், பேரரசு, பிரபு சாலமன், ஆர்.கண்ணன், பாலாஜி சக்திவேல், எழில், மனோபாலா, துரை, எஸ்.எஸ்.ஸ்டான்லி, நடிகை குயிலி, பெப்சி சிவா, பெப்சி விஜயன் மற்றும் உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக வள்ளுவர் கோட்டம் அருகே மேடை அமைக்கப்பட்டு அதில் போராட்டம் நடக்கிறது. இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி திரையுலகினர் பலர் பேசினர். காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 5 மணி அளவில் முடிவடைகிறது. இப்போராட்டத்துக்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி உள்ளிட்ட பல்வேறு திரைப்பட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment