Sunday, March 24, 2013

ஆலயத்தை அபிவிருத்தி செய்ய உடன் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி: இனப் பாகுபாடுகளை களைந்து உலகுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Sunday, March 24, 2013
இலங்கை::திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தை அபிவிருத்தி செய்ய உடன் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

இந்த கோயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விசேட பூஜையில் ஜனாதிபதி கலந்துகொண்டார். இதன்போது, குறித்த ஆலயத்தை அபிவிருத்தி செய்து தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்தே இந்த ஆலயத்தை அபிவிருத்தி செய்ய உடன் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ராஜபக்ஷ உறுதியளித்தார்.

இதேவேளை, திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் சக்தி வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கணணி கூடத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார்.

தயட்ட கிருள்ள வேலைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேற்படி கணணி கூடத்தினை திறந்துவைத்த ஜனாதிபதி ராஜபக்ஷ, அங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்விலும் கலந்துகொண்டு உரையாற்றினார்.

மேற்படி ஜனாதிபதியின் விஜயத்தின் போது கிழக்கு மாகாண ஆளுநர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம, அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பி.எச். பியசேன, சிறியாணி விஜேவிக்ரம மற்றும் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்...

இனப் பாகுபாடுகளை களைந்து உலகுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

'சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற இனப் பாகுபாடுகளைக் களைந்து சிறந்தவொரு சமூகமாக நாம் இந்த உலகத்துடன் ஒன்றிணைந்து செயற்பட் வேண்டும். இந்த நாட்டிலே வாழுகின்ற அனைத்து இனங்களையும் சார்ந்தவர்கள் அவரவருடைய மதங்களையும், சம்பிரதாயங்களையும், கலாசாரங்களையும், பாரம்பரியங்களையும் தனித்துவத்தையும் பாதுகாக்கின்ற பொறுப்பு மக்களாகிய உங்களுக்கு உள்ளது. நாம் எமது நாட்டுக்குரிய தனித்துவத்தை பேணிப் பாதுகாத்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

உலகம் இன்று நவீன தொழில்நுட்பத்தினூடாக முன்னோக்கிச் செல்கின்ற போது நாங்களும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் அதனுடன் இணைந்து செயற்பட வேண்டும் அப்போதுதான் நம்மை எதிநோக்கும் சவால்களுக்கு முகம் கொடுக்க முடியும்' எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கு முன்னெடுப்பு எனும் வேலைத்திட்டத்தின் கீழ் தேசத்துக்கு மகுடம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக சம்மாந்துறை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன 'ஈ' கல்விமையக் கட்டிடத்தினை நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, 'சம்மாந்துறையில் இந்த இலத்தினியல் கல்விக்கூடத்தை அதாவது இந்தக் கணனி 'ஈ' மையத்தை திறந்து வைப்பதையிட்டு நான் மிகவும் சந்தோஷமடைகின்றேன். இந்தப் பிரதேசத்தில் 30 வருடகாலமாக சிவில் நிலைமை இன்மையால் மாணவச் செல்வங்கள் கல்வியை தொடர்வதில் பல்வேறு சிக்கல்களை அனுபவித்துள்ளீர்கள் அது எனக்குத் தெரியும்.

இன்று அந்த நிலையை மாற்றியமைத்து இன்று கல்வி கற்கக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது சிறந்த முறையில் கல்வி கற்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்துள்ளது. இறுதியாக அன்பின் பிள்ளைகளே கல்விதான எமது செல்வம் அதுதான் எமது ஆயுதம் நன்றாக கல்விகற்று முன்னேற வேண்டும். அதுவே எனது ஆசையாகும். உங்களுக்கு என்னுடைய நல்லாசிகள் கிடைக்க ஆசிர்வதிக்கின்றேன்' என தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும், சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.எம்.நௌஷாட்டின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தொலைத்தொடர்புகள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட், மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, விமலவீர திஸாநாயக்க, ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம, நாடாளுமன்ற உறுப்பினர், சிறியாணி;, மாகாணசபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ.அமீர், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே,எம்.மன்சூர் உட்பட திணைக்களத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment