Wednesday, March 20, 2013
சென்னை::இலங்கை மீது போர் குற்ற நடவடிக்கை எடுக்க தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி மாநிலம் முழுவதும் புலிகளின் ஆதரவாளர்கள் மாணவர்கள் தொடர் முழக்கப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இலங்கையில் இறுதிகட்ட போரின்போது லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் பலர் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதனால் இலங்கை அதிபர் ராஜபக்சே மீது போர் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். ஐநாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே ஆயிரம் மாணவர்கள் ஒன்று திரண்டனர். போலீசார் கேட்டுக் கொண்டதற்காக நடைபாதையில் நின்று கோஷங்களை எழுப்பினர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல¢ ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிடுவதற்காக செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே திரண்டனர். போலீசுக்கு தகவல் கிடைத்ததும், விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர். அதேபோல கே.கே.நகரில் உள்ள மீனாட்சி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர். மாவட்ட தலைநகரங்களில் மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்றன.

No comments:
Post a Comment