Saturday, March 23, 2013

தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களை வெளிநாடு வாழ் புலிகளின் ஆதரவாளர்களே தூண்டி விடுகின்றனர்: வர்த்தகத்தை மேம்படுத்த இந்தியா-இலங்கை உடன்பாடு செய்துகொள்ள வேண்டும்: இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம்!

Saturday, March 23, 2013
மும்பை::இந்தியா-இலங்கை உறவுகள் தொடர்பாக மும்பையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், இந்தியாவுக்கான இலங்கை தூதர்  பிரசாத் கரியவாசம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவும், இலங்கையும் நட்பு நாடுகள் ஆகும். தற்போது ஏற்பட்டுள்ள சில அரசியல் பிரச்சினைகள் தற்காலிகமானதுதான். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இலங்கையின் அமைவிட உத்தியை பயன்படுத்தி இந்தியா ஏராளமான ஆதாயங்களை அடைய முடியும். இலங்கையை சிறந்த வர்த்தக மையமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இலங்கையில் செயல்படும் 46 சர்வதேச நிறுவனங்களில் 43 நிறுவனங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை.

இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. ஆனால் இதை செயல்படுத்துவதில் போதிய முன்னேற்றம் காணப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தை பயனுள்ள வகையிலும், அர்த்தமுள்ள வகையிலும் திறம்பட செயல்படுத்த இரு நாடுகளும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்த உடன்பாடு செய்துகொள்ள வேண்டும். இதன்மூலம் இரு நாடுகளின் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும்.

இலங்கையில் விளையும் தேயிலை உலக பிரசித்தி பெற்றது ஆகும். தேயிலையை பதப்படுத்தும் பணி, 'பேக்கேஜிங்' வினியோகம் ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும் இலங்கையிலும், கேரளாவிலும் உலக தரம் வாய்ந்த தேங்காய் விளைகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிகபட்ச ஆதாயம் அடைவதற்கான சாத்தியக்கூறுகளை இரு நாடுகளும் ஆராயவேண்டும்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது அதிகரித்து இருப்பதால் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்....

இந்நிலையில் டெல்லியில் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம், ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம் தேவையற்றது. இலங்கையில் சர்வதேச சமூகத்தின் தலையீடு தேவையில்லை. நாங்களே ஒவ்வொரு நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகிறோம். சர்வதேச நிலையிலான ஒரு தீர்மானம் என்பது தமிழ்நாடு மற்றும் இலங்கையில் உணர்வுகளை கிளப்பிவிடக் கூடியதாகவே இருக்கும்.

தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களை வெளிநாடு வாழ் புலிகளின் ஆதரவாளர்களே தூண்டி விடுகின்றனர். இந்தப் போராட்டங்கள் தீவிரவாத செயல்களைப் போல இருக்கின்றனர். அப்பாவி இலங்கையர்களைத் தாக்குகின்றனர். இதைத்தான் இலங்கையில் கடந்த காலங்களில்  புலிகளின் ஆதரவாளர்கள் கடை பிடித்தனர். வன்முறை மூலம் எந்த தீர்வையும் உருவாக்கி விட முடியாது என்றார் அவர்.

இவ்வாறு இலங்கை தூதர் கரியவாசன் கூறினார்.

No comments:

Post a Comment