Sunday, March 24, 2013
இலங்கை பிரச்சினையில் மாணவர்கள் எடுத்த விஸ்வரூபம் அத்தனை அரசியல் கட்சிகளையும் ஆட்டம் காண வைத்துவிட்டது. கிட்டத்தட்ட தமிழகத்தின் அரசியல் களத்தையே மாணவர்கள் போராட்டம் புரட்டி போட்டுள்ளது என்பதுதான் உண்மை.
தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி உடைவுக்கும் இந்த போராட்டமே காரணமாக அமைந்தது. எதிர்பாராத இந்த சூறாவளியால் திசைக்கு ஒன்றாக கட்சிகள் பிரிந்து விட்டன. எல்லா கட்சிகளுமே தனித்தனியாக அமர்ந்து அடுத்து என்ன? என்ற யோசனையில் ஆழ்ந்துள்ளன.
உப்பு சப்பில்லாத அமெரிக்க தீர்மானம் இந்திய அரசின் ஆதரவோடு நிறைவேறிவிட்டது. இப்போதைக்கு இலங்கை பிரச்சினை தற்காலிகமாக அமைதி பெறும். அடுத்து அரசியல் கட்சிகள் எதிர்பார்ப்பது பாராளுமன்ற தேர்தல் களம்தான்.
முறைப்படி தேர்தல் வர இன்னும் 10 மாதங்கள் உள்ளது. ஆனால் கூட்டணி கட்சிகள் ‘முறைப்பதால்’ எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்ற சூழல் உருவாகி உள்ளது. தேர்தல் களத்தை சந்திக்க ஒவ்வொரு கட்சியும் தங்களை பலப்படுத்தி கொள்ளும் முயற்சிகளை மெதுவாக தொடங்கி உள்ளன.
யாரோடு யார் சேருவது? அப்படி சேருவதால் ஏற்படும் சாதக, பாதகம் என்ன? என்று அலசி பார்க்கிறார்கள். கடந்த தேர்தலை போல் இல்லாமல், இந்த தேர்தல் தமிழக கட்சிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
கடந்த முறை அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் ஒரு அணியுமாக தேர்தலை சந்தித்தது. ஆனால் இந்த முறை அப்படிப்பட்ட வாய்ப்பு இல்லை என்றே சொல்லலாம்.
மாணவர்கள் போட்ட அஸ்திரத்தால் காங்கிரஸ் கூட்டணி கப்பலில் மிகப் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. தப்பித்தால் போதும் என்று தருணம் பார்த்து தி.மு.க.வும், விடுதலை சிறுத்தையும் வெளியேறி விட்டன.
தற்போதைய சூழ்நிலையில் காங்கிரஸ் தத்தளித்து கொண்டிருக்கிறது. பொதுவாகவே தேசிய கட்சிகளான காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் தமிழகத்தில் மிகப்பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. திராவிட கட்சிகளின் தோளில் ஏறித்தான் இதுவரை சவாரி செய்து வந்துள்ளன.
பிரதான கட்சிகளான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தேசிய கட்சிகளை கணக்கில் எடுத்து கொள்ளாமல் மற்ற கட்சிகளோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து அறுவடைக்கு பிறகு மத்தியில் பார்த்து கொள்ளலாம் என்றே கருதுகின்றன.
கையறு நிலையில் தவிக்கும் காங்கிரசை கரை சேர்க்க ராகுல்காந்தியே நேரடியாக முயற்சி மேற் கொண்டுள்ளார். அவரை சந்திக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் விஜயகாந்த் கட்சி எப்படி? என்று அடிக்கடி கேட்டு வருகிறார். எனவே தே.மு.தி.க.வை காங்கிரஸ் பக்கம் வளைத்து போட்டால் பரிதாபகரமான நிலையில் இருந்து மீளமுடியும் என்று கருதுகிறார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரசுக்கு 6 சதவீத செல்வாக்குதான் என்பது புள்ளி விபரம். தே.மு.தி.க.வுக்கு 15 சதவீதம் உள்ளது. இப்போதைய சூழ்நிலையில் காங்கிரசுடன் சேருவது தற்கொலைக்கு சமமானதாகத்தான் அமையும் என்று தே.மு.தி.க நிர்வாகிகள் கருதுகிறார்கள். எனவே அப்படிப்பட்ட ஒரு முடிவை நிச்சயம் விஜயகாந்த் எடுக்க மாட்டார் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கூறினார்.
அ.தி.மு.க.வில் சூடுபட்டதால் இனி அந்த பக்கமும் விஜயகாந்த் திரும்ப மாட்டார். எனவே அவரை தி.மு.க. பக்கம் இழுப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு இருகட்சிகளுக்குள்ளும் ரகசியமாக ஓசையின்றி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதுவும் விரைவிலேயே முடிந்துவிடும் என்கிறார்கள்.
தே.மு.தி.க விடுதலை சிறுத்தைகள், ஒரு கம்யூனிஸ்டு கட்சி மற்றும் சில அமைப்புகளை ஒருங்கிணைத்து கூட்டணியை உருவாக்கினால் சாதிக்கலாம் என்று தி.மு.க. மேலிடம் கணக்கு போடுகிறது.
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உடைந்தது அ.தி. மு.க.வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ம.தி.மு.க.வையும் இணைத்து புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் பிணக்கையும் பேசி தீர்த்து விட்டால் கணிசமான தொகுதிகளை கைப்பற்றலாம் என்று அ.தி.மு.க. நம்புகிறது.
வடதமிழகத்தில் குறிப்பிட்ட தொகுதிகளை குறிவைத்து தனித்து நின்று சாதிக்கலாம் என்று பா.ம.க. நம்பிக்கையோடு இருக்கிறது. ஆனால் கடைசி நேரத்தில் தேசிய கட்சிகளுக்கு கை கொடுத்தாலும் ஆச்சரியமில்லை என்ற பேச்சும் அடிபடுகிறது.
வருகிற தேர்தலில் தமிழ்நாட்டில் 3-வது அணி என்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது என்றே சொல்லலாம். அந்த அணி எது? அதற்கு தலைமை தாங்குவது யார்? என்பது ன் கேள்விக்குறி. போகபோகத்தான் இந்த கேள்விக்கு விடை தெரியும்.
வருகிற பாராளுமன்ற தேர்தல் கட்சிகளுக்கு இடையே நடக்கும் போட்டியைவிட ராகுல் காந்தியா? நரேந்திர மோடியா? என்ற எதிர்பார்ப்புடன்தான் இருக்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலை உருவானால் தமிழ்நாட்டிலும் பா.ஜனதாவுக்கு செல்வாக்கு இருக்கலாம்.
எனவே திராவிட கட்சி ஏதாவது ஒன்றோடு இணைந்து தங்கள் தளத்தை வலுப்படுத்த பா.ஜனதா தலைவர்களும் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. தற்போது திரைமறைவில் நடக்கும் ஒத்திகைகள் காட்சிகளாக அரங்கேறும் போதுதான் யாருக்கு ஓட்டு? யாருக்கு வேட்டு? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.



No comments:
Post a Comment