Tuesday, March 19, 2013

இலங்கையர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை!

Tuesday, March 19, 2013
இலங்கை::தமிழகத்தில் உள்ள இலங்கையர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு வெளிவிவகார அமைச்சு இந்திய மத்திய அரசாங்கத்திடமும் தமிழக அரசிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம கூறினார்.

இந்தியாவில் உள்ள இலங்கையர்கள் மற்றும் அங்கு சென்றுள்ள இலங்கை யாத்திரிகர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பிலும் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை நிறுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடி வருவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம கூறினார்.

புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஊடாக இந்திய அரசாங்கத்தை தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகம் சென்றுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்துமாறு நேற்று இந்திய உயர்ஸ்தானிகர் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கூறினார்.

இதேவேளை, இலங்கையுடன் நடைபெறவிருந்த வருடாந்த பாதுகாப்பு தொடர்பிலான கலந்துரையாடலை ரத்துசெய்வதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பீ.டீ.ஐ செய்தி சேவையை

மேற்கோள்காட்டி 'த ஹிந்து' செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இம்மாதம் 25ஆம் திகதி புதுடில்லியில் நடைபெறவிருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், கலந்துரையாடல் ரத்து செய்யப்பட்டமைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லையெனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

வருடாந்தம் இரு நாடுகளுக்குமிடையில் நடைபெறும் இந்தக் கலந்துரையாடலில் இருதரப்பு பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் எதிர்கால பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பிலும்

ஆராயப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment