Saturday, March 23, 2013
இலங்கை::அரசாங்கம் முன்னெடுத்து வரும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஜெனீவா தீர்மானத்தினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 30 வருட யுத்தத்தின் பின்னர் தனியாக எழுந்து நிற்க முயலுகையில் பலம் வாய்ந்த நாடுகள் மனித உரிமை பேரவையுடன் இணைந்து நாட்டை துண்டாடும் புதிய கொள்கையொன்றை இலங்கையில் முன்னெடுக்க தயாராவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதான அமைச்சர்கள் நேற்று தெரிவித்தனர்.
இலங்கைக்கு எதிராக வாக்களித்ததன் மூலம் இந்தியாவுடனான நட்புறவில் விரிசல் ஏற்படாது என்று தெரிவித்த அவர்கள், இந்தியா முகம்கொடுத்திருந்த இக்கட்டான நிலை காரணமாக இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியா தொடர்பான எதிர்ப் பலையை இலங்கை யில் ஏற்படுத்த இடமளிக்கப்படாது எனவும் குறிப்பிட்டனர். இலங்கைக்கு ஆதரவு வழங்கிய நாடுகளுக்கும் இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் அமைச்சர்களான டளஸ் அழகப் பெரும, சுசில் பிரேம் ஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர்.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் டளஸ் அழகப்பெரும, 2009 மே மாதம் முதல் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. யுத்தத்தின் இறுதி 10 நாட்கள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைத்தே இலங்கைக்கு எதிராக பிரேரணை முன்வைக்கப்பட்டது.
ஆனால் 30 வருட கால யுத்தம் குறித்தோ அதன்போது புலிகள் மேற் கொண்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் குறித்தோ எதுவும் பேசப்படவில்லை.
காலனித்துவ ஆட்சிகளின்போது நாடுகள் துண்டாடப்பட்டன. தற்பொழுது நாட்டைத் துண்டாடும் புதிய கொள்கையொன்றை மனித உரிமைப் பேரவை இலங்கையில் பரீட்சித்துப் பார்க்கத் தயாராகிறது. அதற்காகவே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையை தனிமைப்படுத்தாமல் இலங்கையை ஆதரித்த நாடுகளுக்கு எமது நன்றியை தெரிவிக்கிறோம். இலங்கைக்கு எதிராக வாக்களித்ததற்காக இந்திய விரோத போக்கொன்றை நாட்டினுள் உருவாக்க சிலர் முயற்சிக்கின்றனர். இந்தியாவுக்குள்ள நெருக்கடி நிலையை நாம் உணரவேண்டும். காங்கிரஸ் ஆட்சி உடைந்தாலும் எம்மை அந்நாட்டு ஆதரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது தவறாகும். இலங்கைக்கு அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டிருந்தால் நாமும் அதேபோன்ற முடிவையே எடுத்திருப்போம். இலங்கைக்கு எதிராக இந்திய பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றை நிறைவேற்ற தி.மு.க முயன்றபோது ஏனைய கட்சிகள் அதற்கு இடமளிக்கவில்லை. அமெரிக்காவே இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டு வந்தாலும் இந்தியாவுக்கு எதிராகவே குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
ஐ.தே.க வும் ஏனைய எதிர்க் கட்சிகளும் இதனை பயன்படுத்தி அரசியல் இலாபம் பெற முயல்கின்றன.
19 வருடங்களாக ஆட்சிக்கு வர கனவு காணும் ஐ.தே.க, மேலும் இரு தசாப்தங்களானாலும் ஆட்சிக்கு வர முடியாது. அரசியல் இலாபத்துக்காக இனங்களிடையே விரிசலை ஏற்படுத்த முயல வேண்டாமென கோருகிறோம்.
இது ஐ.ம.சு.மு. அரசாங்கத்தினதோ ஜனாதிபதியினதோ தனிப்பட்ட பிரச்சினையல்ல.
இனங்களுக்கிடையில் நெருக்கத்தை ஏற்படுத்தி வருகையில் இனங்களை தூரமாக்குவதற்கு இந்த பிரேரணை ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடங்களிலும் இலங்கைக்கு எதிராக இவ்வாறான பிரேரணைகள் வரும் என்றார்.
அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் கூறியதாவது, அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காததாலேயே இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
புலிப் பயங்கரவாதத்தை ஒழித்தது தவறு என்றே இவர்கள் கூறுகின்றனர். புலிகளை ஒழித்திருக்காவிட்டால் எமக்கு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது.
1988/89களில் ஐ.தே.க. ஆட்சியில் பல்லாயிரம் இளைஞர், யுவதிகள் கொலை செய்யப்பட்டனர். இது குறித்து பேசாமல் இறுதிக் கட்ட யுத்தம் குறித்து சர்வதேச மட்டத்தில் கேள்வி எழுப்புகின்றனர்.
இறுதிக் கட்ட யுத்தத்தில் புலித் தலைவர்கள் கொல்லப்பட்டதாலேயே புலம்பெயர்ந்த சில தமிழர்களின் அழுத்தம் காரணமாக எம்மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்படுகின்றன.
வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு வேறு நாடுகள் எப்படி எமக்குக் கூற முடியும். இது எமது நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புள்ள விடயமாகும்.
ஐ.தே.க. வினால் தான் புலம்பெயர்ந்தோர் அமைப்புக்கள் உருவாகின. 1983 இல் தமிழ் மக்களுக்கு எதிராக செய்யப்பட்ட அநீதியினாலேயே இலட்சக்கணக்கான மக்கள் வெளிநாடுகளுக்கு சென்றனர்.
தமக்கு விருப்பமானவாறு தலையாட்டும் ஆட்சிகளையே அமெரிக்கா ஆதரிக்கிறது. அழுத்தம் காரணமாகவே பல நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து வாக்களித்தன. இலங்கையிலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களும் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக பொய்ப்பிரசாரம் செய்தன. இலங்கைக்கு எதிராக பேசிவிட்டு அவை கட்டுநாயக்கவூடாக இலங்கைக்கு தடையின்றி வர அவகாசம் இருக்கிறது.
ஜெனீவா விவகாரம் தேசிய ரீதியான பிரச்சினையாகும். இதற்கு கட்சி பேதமின்றி ஒன்றுபட்டு முகம்கொடுக்க வேண்டும். இதற்கு முன்னரும் இலங்கைக்கு எதிராக இதேபோன்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டது. ஆனால் இவற்றை செயற்படுத்த எமது இனக்கப்பாடு தேவை என்றார்.
அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா கூறியதாவது,
யுத்த காலத்தில் இந்தியா எமக்கு உதவியது. அழுத்தம் காரணமாக இந்தியா எதிராக வாக்களித்தது.
மாநில அரசுகள் கூறுவதற்கு ஏற்ப இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் காலத்துக்கு காலம் மாற்றம் ஏற்படக்கூடாது.
கடந்த முறை இஸ்ரேலுக்கு எதிராக பல பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை அமெரிக்கா எதிர்த்தது. +&திரிக்கா இரண்டு விதமான கொள்கையில் செயற்படுகிறது. நாம் மறைவான நேர அட்டவணைப்படி செயற்படவில்லை.
வடக்கில் பாரிய அபிவிருத்தி இடம்பெற்றுள்ளது. செப்டம்பரில் வட மாகாண தேர்தல் நடத்தப்பட உள்ளது என்றார்.

No comments:
Post a Comment